நன்றிகெட்ட மனிதர்களை விட நாய்களே மேல்.! இபிஎஸ் கருத்து வைத்தியலிங்கம் கடும் விமர்சனம்.!

நன்றிகெட்ட மனிதர்களை விட நாய்களே மேல் என இபிஎஸ் கருத்து வைத்தியலிங்கம் கடும் விமர்சனங்களோடு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், ஓ பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் சந்திப்பு குறித்து பேசுகையில், மாயமானும் மண் குதிரையும் , பூஜ்ஜியமும் பூஜ்ஜியம் ஒன்று சேர்ந்தால் பூஜ்யம் தான் கிடைக்கும் என்றும், கடுமையாக விமர்சித்து இருந்தார். இதற்கு வழி வகுக்கும் விதமாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்தியலிங்கம் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டு உள்ளார்.

அதில், நன்றி கெட்ட மனிதனை விட நாய்கள் மேல் என்று கடுமையாக விமர்சித்து அந்த அறிக்கையை ஆரம்பித்து உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்பதற்கும், நான்காண்டு காலம் ஆட்சியை நடத்துவதற்கும், யாரிடம் கெஞ்சி கூத்தாடி முதல்வர் ஆனார் என்பதை மறைத்து விட்டார் என்று விமர்சித்து இருந்தார். ‘ஆமை புகுந்த வீடு உருப்படாது’ என்பது போல் எடப்பாடி பழனிச்சாமி எனும் துரோகியின் நுழைவால் அதிமுக அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என குறிப்பிட்டார்.

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா – இபிஎஸ் சந்திப்பின்போது சிலர் ஏன் இடம்பெறவில்லை என்று தொலைக்காட்சிகள் கேட்டபோது, பதில் அளிக்க முடியாத எடப்பாடி பழனிச்சாமி தற்போது ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பின்போது வைத்தியலிங்கம் எங்கே? ஜே.டி.சி.பிரபாகர் எங்கே? மனோஜ் பாண்டியன் எங்கே என கேள்வி கேட்கிறார் என்று விமர்சித்து உள்ளார். மேலும், அனைவரிடமும் ஆலோசித்த பிறகு தான் ஓபிஎஸ் – டி.டி.வி.தினகரன் சந்திப்பு நடைபெற்றது என்றும் அவர் விளக்கம் கொடுத்தார்.

அதேபோல், சபரீசன் உடனான ஓபிஎஸ் சந்திப்பு குறித்து குறிப்பிடுகையில் அது ஆயிரம் பேருக்கு முன்னால் நடந்த வெளிப்படையான மரியாதை நிமித்தமான சந்திப்பு என குறிப்பிட்டு எடப்பாடி பழனிச்சாமி தான் திமுகவின் பி டீம் என்றும் அறிக்கையில் விமர்சித்து உள்ளார்.

இறுதியாக துள்ளுகிற மாடு பொதி சுமக்காது. என்பது போல துள்ளுபவர்கள் பொறுப்பை ஏற்க மாட்டார்கள் துள்ளாத தலைவனுக்கு மக்கள் வாக்களிக்க முடிவெடுத்துவிட்டார்கள். எப்படிபட்ட பாவத்தை செய்தவர்களுக்கும் தப்பிக்க வழி உண்டு. செய்த நன்றியை மறந்தவர்களுக்கு அதிலிருந்து தப்பிக்க வாய்ப்பில்லை என்று அந்த அறிக்கையில் வைத்தியலிங்கம் குறிப்பிட்டு உள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.