தமிழகத்தில் இனி ஒரு வாரம் விட்டு தடுப்பூசி முகாம் – அமைச்சர் அறிவிப்பு

By

தமிழகத்தில் வரும் 24-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது என அமைச்சர் தகவல்.

கொரோனா பூஸ்டர் இலவச தடுப்பூசி திட்டத்தை இன்று சென்னையில் தொடங்கி வைத்தார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதன்படி, இந்தியா முழுவதும் இன்று முதல் 75 நாட்களுக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் இனி ஒரு வாரம் விட்டு தான் தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.

அதன்படி, வரும் 24-ஆம் தேதி 50 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது என்றும் தினமும் 2,950 இடங்களில் தடுப்பூசி போடப்படும் எனவும் கூறினார். தமிழகத்தில் முதல், இரண்டாவது டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ் என மொத்தம் 4.77 கோடி பேர் செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் முக ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார். கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் முதல்வர் இன்று அல்லது நாளை வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தார். மேலும், ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்த 4 மருத்துவமனைகளும் மூடப்படும் என்றும் கூறினார்.

Dinasuvadu Media @2023