தேர்தல் நடத்த ஆணையம் சம்மதம் – தப்புகிறது உத்தவ் தாக்கரே முதல்வர் பதவி.!

மகாராஷ்டிராவில் சட்ட மேலவைக்கு தேர்தல் நடத்த ஆணையம் ஒப்புதல் அளித்ததால் உத்தவ் தாக்கரேவின் முதல்வர் பதவி தப்புகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் நடைபெற்றது. அப்போது, பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தேர்தல் முடிவுக்கு பிறகு முதல்வர் பதவி கேட்டதால் இரண்டு கட்சிகளுக்கு இடையே பிளவு ஏற்பட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த பாஜக, தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் ஆதரவுடன் ஆட்சி அமைத்து, பிறகு அது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போகவே மீண்டும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார்கள். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்து வருகிறார்.

இதையடுத்து உத்தவ் தாக்கரே சட்டமன்ற உறுப்பினராக இல்லாத காரணத்தால் அவர் பதவியேற்ற 6 மாதத்திற்குள் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுத்தப்பட வேண்டும். ஆனால், பதவியேற்று 5 மாதங்கள் ஆகியும் தற்போதைய கொரோனா சூழ்நிலையில் அதற்கான வாய்ப்பில்லாத நிலை நிலவியது. இதனால் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் முதல்வர் பதவி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சட்ட மேலவை நியமன உறுப்பினர் ஆவதற்கு உத்தவ் தாக்கரே முயற்சி செய்தார். அதன்படி, அமைச்சரவையை கூட்டி ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் வழங்கினார். இருந்தாலும் ஆளுநர் இந்த கடிதம் மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பிரதமர் மோடியை தொடர்புகொண்டு சட்ட மேலவைக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில், வரும் 28ம் தேதி உடன் முதல்வர் பதவியேற்று 6 மாதம் காலம் நிறைவடைய உள்ள நிலையில், மகாராஷ்டிராவில் சட்ட மேலவைக்கு தேர்தல் நடத்த ஆணையம் ஒப்புதல் அளித்ததால் உத்தவ் தாக்கரேவின் முதல்வர் பதவி தப்புகிறது. ஆணையத்தின் இந்த முடிவால் முதல்வர் பதவி இழக்க இருந்த நிலையில், தப்புகிறார் உத்தவ் தாக்கரே. மே 27 ஆம் தேதிக்கு முன்னர் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இருக்க வேண்டியது அவசியம் என்றும் தற்போது உத்தவ் தாக்கரே எம்எல்ஏவாக இல்லாததால் மே 27க்குள் அவர் சட்ட மேலவைக்கு தேர்தெடுக்கப்பட வேண்டும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. இதனிடையே சட்ட மேலவைக்கு தேர்தல் நடத்த பிரதமர் மோடியை தொடர்புகொண்டு கோரிக்கை விடுத்திருந்தார் உத்தவ் தாக்கரே என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்