அமெரிக்கா-இந்தியா இடையான விமான சேவைகள் தொடக்கம்!

கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவில் விமான சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில், அமெரிக்கா-இந்தியா இடையான விமான சேவைகள் ஜூலை 23 முதல் தொடங்கவுள்ளது.

சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வைரஸின் தாக்கத்தால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் அனைத்து சர்வதேச விமானங்களுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், ஜூலை 23 முதல் அமெரிக்க-இந்தியா இடையான பயணிகள் விமானச் சேவைகளை தொடங்குவதற்கு அமெரிக்க விமான நிறுவனங்களுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க விமான போக்குவரத்துக்கு துறை தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவுக்கு இயக்கப்படும் சார்டர் சேவை விமான கேரியர்களை அனுமதிப்பதில்லை எனவும், “நியாயமற்ற மற்றும் பாரபட்சமான நடைமுறைகளில்” இந்தியா ஈடுபடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இந்திய நாட்டின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், சர்வதேச சிவில் விமான நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு முயன்று வருகின்றது எனவும், சில விமான நிறுவனங்களில் இருந்து அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.