நாடு முழுவதும் திட்டமிட்டபடி யுபிஎஸ்சி முதன்மை தேர்வுகள் தொடங்கியது!

கொரோனா தொற்று பரவல் மத்தியில் நாடு முழுவதும் திட்டமிட்டபடி யுபிஎஸ்சி முதன்மை தேர்வுகள் தொடங்கியது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான தேர்வுகள் இன்று முதல் நடைபெறும் என மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஏற்கனவே அறிவித்து இருந்தது. 2021-ஆம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நடைபெறுமா என்று தேர்வு எழுதுபவர்கள் மத்தியில் சந்தேகம் நிலவிய நிலையில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வுகள் திட்டமிட்டபடி இன்று தொடங்கும் என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் நாடு முழுவதும் திட்டமிட்டபடி யுபிஎஸ்சி முதன்மை தேர்வுகள் தொடங்கியுள்ளது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுகள் அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் தேர்வு நடைபெறுமா என தேர்வர்களுக்கு குழப்பம் இருந்த நிலையில், இன்று தேர்வு திட்டமிட்டபடி தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் 2 மையங்களில் நடைபெறும் முதன்மை தேர்வில் 332 பேர் இன்று பங்கேற்றுள்ளனர். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான தேர்வுகள் ஜன.7, 8, 9, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.