2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவது குறித்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்.
நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வாங்கி நேற்று அறிவித்திருந்தது. கடந்த 2016-ஆம் ஆண்டு பிரதமர் மோடி பணமதிப்பு நீக்கம் குறித்து அறிவிப்பை வெளியிட்டார். அப்போது, 500, 1000 ரூபாய் நோட்டுகளே புழக்கத்தில் இருந்த நிலையில், அவை ஒரே இரவில் செல்லாது என அறிவிக்கப்பட்டது. மேலும், கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக புதிதாக 2000, 500, 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது.
ஆனால், கருப்பு பணம் ஒழிந்ததா என கேட்டால், அதற்கு பதில் இல்லை. மறுபக்கம், சில்லறை கிடைப்பதில்லை உள்ளிட்ட பல காரணங்களால் பொதுமக்கள் இந்த 2000 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துவதை குறைத்தே வந்தனர். இதனால், 2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற உள்ளதாகவும் தகவல் வெளியானது, இருப்பினும், அதை மத்திய அரசு மறுத்தே வந்தது. இந்த நிலையில், நேற்று ரிசர்வ் வங்கி திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதில், 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. மே மாதம் 23-ஆம் தேதியிலிருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும் வரும் செப்.30-ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
2000 ரூபாய் நோட்டுகள் திருமப பெறப்படும் என்ற அறிவிப்பிற்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர். தமிழக முதல்வர், மேற்குவங்க முதலமைச்சர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளார். அந்தவகையில், 2000 நோட்டுகள் விவகாரத்தில் பிரதமர் மோடி மீது டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது பதிவில், முதலில், 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தினால் ஊழலை தடுக்க முடியும் என்றார்கள். இப்போது, 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதால் ஊழல் ஒழிந்துவிடும் என்று கூறுகிறார்கள். பிரதமராக இருப்பவர் படித்திருக்க வேண்டும் என்று இதற்காகத்தான் கூறுகிறோம். படிக்காத பிரதமரிடம் யார் எதை வேண்டுமானாலும் கூறலாம், அவருக்கு பிரியாது. ஆனால் பாதிக்கப்படுவது மக்கள் தான் என தெரிவித்துள்ளார்.