விவசாயிகள் பிரச்சினையா? அல்லது இந்தியா – பாக் பிரச்சினையா? குழம்பிய இங்கிலாந்து பிரதமர்!

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியா – பாக் பிரச்சனை என பேசியுள்ளது, சர்ச்சைக்குள்ளானது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், டெல்லியில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இந்த போராட்டம் தொடர்பாக இங்கிலாந்தின் கவலைகளை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியப்படுத்துமாறு அந்நாட்டு எதிர்க்கட்சி எம்.பி.யும், சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த தன்மன்ஜீத் சிங் தேசி நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கோரிக்கை விடுத்தார். இதற்கு பிரதமர், விவசாயிகள் பிரச்னை, இந்தியா-பாகிஸ்தான் இடையே தீர்க்க வேண்டிய பிரச்னை என பதிலளித்தார்.

மேலும் பேசிய அவர், இந்தியா-பாகிஸ்தான் இடையே என்ன நடக்கிறது? என்பது குறித்து தீவிர கவலைகள் உள்ளதாகவும், ஆனால் இவை அனைத்துக்கும் தீர்வுகாண இவ்விரு நாடுகளும் முன்வருகின்றன என கூறிய அவர், இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னையை பேச்சுவார்த்தை மூலமாக தீர்வுக்காண வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த எதிர்க்கட்சி எம்.பி. தேசி, தனது டுவிட்டர் பக்கத்தில், வேளாண் சட்டங்கள் பற்றி இந்தியாவில் அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு பயன்படுத்தியதை கண்டு பலரும் அச்சமடைந்தனர். அகிம்சையாக போராடுவது அனைவரின் அடிப்படை உரிமையாகும். நமது பிரதமர் என்ன பேசுகிறார் என்பதை அவர் உணர்ந்திருந்தால், நன்றாக இருக்கும் என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.