உதயநிதி ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் – ஈபிஎஸ்

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர் கெட்டு போய் உள்ளது என ஈபிஎஸ் குற்றசாட்டு. 

2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

அதிமுக அமளி 

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வந்த நிலையில், அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியை பேச அனுமதிக்காததால், அமளியில் ஈடுபட்ட நிலையில் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஈபிஎஸ் பேட்டி 

இந்த நிலையில், தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈபிஎஸ், என்எல்சி விரிவாக்கத்திற்கு விவசாய நிலத்தை பறிக்கும் செயலைக் கண்டித்தும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் அமல் படுத்தாதைக் கண்டித்தும் வெளிநடப்பு செய்தோம்.

உதயநிதிக்கு நோபல் பரிசு

சொத்து, குடிநீர், மின்சாரம், பால் மீதான வரி உயர்வுதான் திமுக ஆட்சி இத்தனை மாதங்களில் தமிழ்நாட்டு மக்களுக்கு தந்துள்ள பரிசு. மின்மினிப்பூச்சி, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் வெளிச்சம் தராது, காணல் நீர் தாகம் தீர்க்காது. நீட் தேர்வு ரகசியத்தை வெளியிட்ட உதயநிதிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்போராட்டம் நாங்கள் நடத்தவில்லையா? என எடப்பாடி பழனிசாமி அரசுக்கு கேள்வி  எழுப்பியுள்ளார்.

எந்த அடிப்படையில் தகுதியை நிர்ணயிக்கிறீர்கள்?

மேலும், அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ1,000 வழங்கப்படும் என்று கூறி, மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டு, இப்போது தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் ரூ1,000 வழங்குவோம் என்று அந்தர் பல்டி அடித்திருக்கிறது திமுக அரசு. எந்த அடிப்படையில் தகுதியை நிர்ணயிக்கிறீர்கள்? ஒட்டுமொத்தமாக மக்களை ஏமாற்றிய பட்ஜெட் இது என விமர்சித்துள்ளார்.

சட்ட ஒழுங்கு அடியோடு சீர் கெட்டுள்ளது 

ஒரே நாளில் தமிழ்நாட்டில் 13 கொலை நடந்துள்ளது. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர் கெட்டு போய் உள்ளது. நிதி நிலையை சரி செய்ய பன்னாட்டு அறிஞர்களை கொண்ட குழுவை அமைத்தார்கள். இதுவரை அக்குழு அளித்த பரிந்துரைகள் என்னென்ன? அதில் எவற்றை எல்லாம் அரசு செயல்படுத்தியது? என எதையும் பட்ஜெட்டிலும் குறிப்பிடவில்லை. அதிமுக ஆட்சியில் வருவாய் குறைவாக இருந்தபோதும் சிறப்பாக செயல்பட்டோம் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment