பிபா u-17 இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் விழ்ந்தது….!

பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் தோற்றது.
யு-17 என்னும் பதினேழு வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. அதை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
டெல்லியில் மாலை 5 மணிக்குத் தொடங்கிய முதல் ஆட்டத்தில் (குரூப் ஏ) கானா அணி 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் கானாவின் இப்ராஹிம் கோலடித்தார். இதையடுத்து ஸ்கோரை சமன் செய்ய கடுமையாகப் போராடியது கொலம்பியா. ஆனால் அதற்கு இறுதிவரை பலன் கிடைக்காததால் கானா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
மற்றொரு ஆட்டம் நவி மும்பையில் மாலை 5 மணிக்கு குரூப் பி நியூஸிலாந்தும், துருக்கியும் மோதின.
இந்த ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் துருக்கி வீரர் அஹமது கோலடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் துருக்கி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 58-வது நிமிடத்தில் நியூஸிலாந்து வீரர் மட்டா கோலடிக்க, ஸ்கோர் 1-1 என்ற சமநிலையை எட்டியது. இதன்பிறகு கோல் எதுவும் விழாத நிலையில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
பின்னர் டெல்லியில் இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஏ பிரிவு ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் படுதோல்வி கண்டது.
இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே அமெரிக்காதான் ஆதிக்கம் செலுத்தியது. 30-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைக்க அமெரிக்காவுக்கு அதில் சார்ஜென்ட் கோலடித்தார்.
அதனைய்த் தொடர்ந்து 51-வது நிமிடத்தில் டர்கினும், 84-வது நிமிடத்தில் கார்ல்டானும் கோலடிக்க, அமெரிக்கா 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.
முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணி, முதல் ஆட்டத்திலேயே படுதோல்வி அடைந்துள்ளது. வரும் ஆட்டங்களில் தன்னை நிரூபிக்கும் என்ற நம்பிக்கையில் இந்திய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.