நீண்ட விவாதத்திற்குப் பிறகு புதிய விதிகளை ஏற்கும் ட்விட்டர் ..!

மத்திய அரசின் புதிய ஐ.டி விதிமுறைகளை ஏற்க தயார் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY),கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி,அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுக்கும் புதிய விதிகளை பிறப்பித்து அவற்றை பின்பற்ற மூன்று மாத கால அவகாசம் அளித்தது.

அதன்படி,இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும்,அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை அரசிடம் தெரிவிக்க வேண்டும்.சர்ச்சைக்குரிய பதிவை யார் முதலில் பதிந்தது என்ற விவரத்தை பகிர வேண்டும்.மேலும் சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் உள்ளன.

மத்திய அரசு கொடுத்த கால அவகாசம் கடந்த 26 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில்,பேஸ்புக்,வாட்ஸ்-அப் மற்றும் கூகுள் நிறுவனங்கள்,மத்திய அரசின் புதிய சட்ட விதிகளை ஏற்பதாக தெரிவித்தன.

ஆனால்,ட்விட்டர் நிறுவனம் இந்த புதிய விதிகளுக்கு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.அதற்கு மத்திய அரசு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது.

இதனையடுத்து,மத்திய அரசின் விதிமுறைகளை ட்விட்டர் நிறுவனம் பின்பற்ற வேண்டும்.அவ்வாறு,செய்யவில்லை என்றால் தடை விதிக்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில்,மத்திய அரசின் புதிய ஐ.டி விதிகளை ஏற்பதாகவும், இந்தியாவில் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அதன்படி,இந்தியாவில் எழும் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கு,ட்விட்டர் சார்பில் இடைக்கால குறைத்தீர்ப்பு அதிகாரியாக தர்மேந்திர சத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும்,சர்ச்சைக்குள்ளான கருத்துகளை நீக்குதல்,புகார்களை கையாளுதல் போன்றவற்றிக்கான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.ஆனால்,அதற்கான அதிகாரிகளை நியமிப்பது குறித்து ட்விட்டர் நிறுவனம் தற்போது பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.