ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் இந்த வசதியை நீக்கும் டுவிட்டர் நிறுவனம்…!

ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் ஃப்ளீட்ஸ் வசதியை நீக்குவதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மைக்ரோ-பிளாக்கிங் தளமான டுவிட்டர் நிறுவனம்,கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு ஃப்ளீட்ஸ் என்ற வசதியை அறிமுகப்படுத்தியது.இது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸைப் போன்று 24 மணி நேரத்திற்குப் பிறகு மறைந்துவிடும்.மக்களை ட்வீட் செய்ய தூண்டும் முயற்சிக்காக இது அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில்,பயனர்களின் குறைந்த பயன்பாடு காரணமாக ஃப்ளீட்ஸ் வசதியை நீக்குவதாக டுவிட்டர் தெரிவித்துள்ளது.இதனால்,ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் ஃப்ளீட்ஸ் முற்றிலுமாக நீக்கப்படும்.முன்னதாக,எட்டு மாதங்களுக்குப் பிறகு,புதிய நபர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படவில்லை என்று டுவிட்டர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டுவிட்டர் நிறுவனம்,தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் கூறியதாவது:”ஆகஸ்ட் 3 ஆம் தேதி நாங்கள் ஃப்ளீட்ஸை நீக்குகிறோம் .அதற்கு பதிலாக,வேறு சில புதிய விஷயங்களைச் செய்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

மேலும்,இது தொடர்பாக டுவிட்டரின் தயாரிப்பு துணைத் தலைவர் இலியா பிரவுன் கூறுகையில்:”டுவிட்டர் உரையாடலில் மக்களுக்கு வசதியாக இருக்க இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் போன்ற வடிவமைப்பைச் செய்வதற்கான நிறுவனத்தின் முயற்சியாக ஃப்ளீட்ஸ் இருந்தது.ஆனால், இதனை நாங்கள் அறிமுகப்படுத்தியதிலிருந்து, எதிர்பார்த்தது போல புதிய நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை”,என்று தெரிவித்தார்.