சசிகலா, டிடிவியை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தியவர் தான் ஓபிஎஸ் என அதிமுக எம்பி சி.வி.சண்முகம் பேட்டி.
தேனி எம்பி ரவீந்திரநாத்துக்கு எதிராக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அதிமுக சார்பில் எம்.பி., சி.வி.சண்முகம் மனு அளித்திருந்தார். தேனி எம்.பி., ஓ.பி.ரவீந்திரநாத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர், அவரை அதிமுக எம்.பி என அங்கீகரிக்கக்கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை மக்களவை சபாநாயகரிடம் சிவி சண்முகம் அளித்தார்.
இதன்பின் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சிவி சண்முகம், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக அங்கீகரிக்கக்கூடாது. ரவீந்திரநாத்தை அதிமுக உறுப்பினராக கருதக்கூடாது என சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில் பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். பழனிசாமியின் கோரிக்கை குறித்து ஆராய்ந்து முடிவு எடுப்பதாக சபாநாயகர் உறுதி அளித்ததாகவும் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பால் எந்த தாக்கமும் இல்லை. ஓபிஎஸ் அதிமுகவுக்கு விசுவாசமாக இருந்ததில்லை. அதிமுக இயக்கத்தை பிளவுபடுத்தியவர் ஓபிஎஸ், அவர் ஒரு திமுகவின் விசுவாசி. சசிகலாவையும், டிடிவி தினகரனையும் எதிர்த்து தர்மயுத்தம் நடத்தியவர் தான் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவை பலவீனப்படுத்தி திமுகவிடம் விற்க வேண்டும் என்பதே ஓபிஎஸ்-ன் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.