ஆரோக்கியம் தரும் கோதுமை மாவு அடையை இப்படி ருசியாக செய்து பாருங்கள்..!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கோதுமை மாவு அடை எப்படி செய்ய வேண்டும் என்று  இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 1 கப், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், வர மிளகாய் – நான்கு, பூண்டு – 4 பல், இஞ்சி சிறிய துண்டு – 1, சீரகம் – 1 ஸ்பூன், ரவை – 2 ஸ்பூன், அரிசி மாவு – 2 ஸ்பூன், வெங்காயம் – ஒன்று(பொடியாக நறுக்கியது), தக்காளி – ஒன்று(பொடியாக நறுக்கியது), கருவேப்பிலை – 1 கொத்து, கொத்தமல்லித்தழை – 1 கொத்து, எண்ணெய் – நான்கு ஸ்பூன், உப்பு – 1 ஸ்பூன்.

செய்முறை: முதலில் மிக்சியில் பூண்டு, வரமிளகாய், இஞ்சி, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து கொர கொர என்று அரைத்து வைத்து கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் கடாயை வைத்து அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடான பின்பு கடலைப்பருப்பு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். இதில் தக்காளி மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கி கொள்ளுங்கள். நன்கு வதங்கிய பிறகு இதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி ஆற வைத்து கொள்ள வேண்டும்.

வேறொரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, ரவை, அரிசி மாவு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். இதனுடன் ஆற வைத்திருக்கும் கலவையையும் சேர்த்து கலந்து இதனுடன் கருவேப்பிலை, கொத்தமல்லியையும் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் தோசைக்கல் வைக்க வேண்டும். கல் காய்ந்த பிறகு, எண்ணெய் தடவி மாவை எடுத்து ஒரு கரண்டி போட்டு தோசை போல் சுட வேண்டும். இருபக்கமும் பொன்னிறம் வந்தவுடன் எடுக்க வேண்டியது தான். சூடான சுவையான ஆரோக்கியமான கோதுமை மாவு அடை ரெடி.