காபூல் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை : அரைக்கம்பத்தில் அமெரிக்க கொடிகள்…!

காபூல் விமான நிலைய தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமெரிக்க தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள மக்கள் மற்றும் பிற நாடுகளை சேர்ந்த மக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். காபூல் விமான நிலையத்தில் மக்கள் பலரும் குவிந்து வரும் நிலையில் விமான நிலையம் அருகே தொடர்ச்சியாக இரண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.

இந்த குண்டுவெடிப்பில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அமெரிக்காவை சேர்ந்த ராணுவ வீரர்கள் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மேலும் நிலைமை மோசம் அடைந்தாலும் கூட மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான பணிகளை அமெரிக்கா தொடர்ந்து செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் நடைபெற்ற வெடிகுண்டு  தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வருகிற 30-ஆம் தேதி வரை அமெரிக்க தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

author avatar
Rebekal