7 மாதங்களுக்கு பின் ஒகேனக்கலில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி!

7 மாத ஊரடங்குக்கு பின் ஒகேனக்கலில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. தற்பொழுதும் ஊரடங்கு நீடித்து வந்தாலும், மக்களுக்காக அரசு சில தளர்வுகள் அறிவித்து வருகிறது.

வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் சில தளர்வுகளை அறிவித்தாலும் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் அரசு சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஒகேனக்கல் அருவி கடந்த ஏழு மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த அருவியில் கடந்த சில, வாரங்களுக்கு முன்பாக சுற்றுலாப்பயணிகள் வர அனுமதி அளிக்கப்பட்டது.இந்நிலையில், தற்பொழுது 7 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் மாவட்ட ஆட்சியர் மலர்விழி அவர்கள் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என அனுமதி அளித்துள்ளார்.

மேலும், சின்னாறு முதல் மெயின் அருவி வரை பரிசல்களை இயக்கவும், மசாஜ் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் கொரோனா கட்டுக்குள் வராததால் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கை உடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
Rebekal