வரும் 70வது குடியரசு தினத்தை சிறப்பாக கொண்டாட உதவும் அட்டகாசமான ஐடியாக்கள்!
இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்த நாட்களில் நமது நாட்டுத்தலைவர்கள் விழிப்புணர்வு அடைந்து, நமது உரிமையை மீட்டெடுக்க பல போராட்டங்களை நடத்தி சுதந்திரம் பெற்றனர். சுதந்திரம் பெற்ற நாட்டை சரியான வழியில் நிர்வகிக்க மற்றும் நாட்டு மக்களுக்கான உரிமைகளை நல்ல முறையில் வழங்கி நாட்டின் முன்னேற்றத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவது போல் கொண்டு வரப்பட்டது தான் இந்திய குடியரசு முறை.
இது கொண்டு வரப்பட்ட தினத்தை தான் நாம் 1950 ஆம் ஆண்டு, ஜனவரி 26 ஆம் தேதியில் இருந்து இந்திய குடியரசு தினமாக, ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகிறோம். இப்படிப்பட்ட குடியரசு தினத்தை அதிலும் இவ்வருடத்தின் 70வது குடியரசு தினத்தை விமரிசையான முறையில் கொண்டாட உதவும் சில வழிகள் பற்றி இந்த பதிப்பில் காணலாம், வாருங்கள்!
பள்ளி-கல்லூரிகளில்..!
பள்ளி-கல்லூரிகளில் மாணவர்களை வரவழைத்து கொடி ஏற்றி மிட்டாய் வழங்கி அனுப்பி வைப்பதற்கு பதிலாக, அவர்களின் மனதில் நாட்டுப்பற்றினை விதைத்து நல்ல குடிமகன்களாக அவர்கள் உருவாக ஆசிரியர்கள் முயற்சி மேற்கொள்ளல் வேண்டும்.
குடியரசு மற்றும் நாட்டுப்பற்று குறித்த மாணவர்களின் அறிவுத்திறனை, அவர்களுக்கு இருக்கும் திறன்களான – அதாவது, கட்டுரை, பேச்சுப்போட்டி, நாட்டியம், விவாதம், கலாச்சார ஆராய்ச்சிக் கட்டுரை, தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றினை கதையாக கூறுதல் முதலிய செயல்களின் மூலமாக வெளிப்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.
தேசிய மாணவர் படை
மேலும் நாட்டினைக் காக்கும் இராணுவத்தின் அடிப்படை பாகமாக அனைத்து பள்ளிகளிலும் இருக்கும் தேசிய மாணவர் படையின் முக்கியத்துவம் மற்றும் அதன் அணி வகுப்பு போன்றவற்றை நிகழ்த்த வேண்டும்.
மாணவர்கள் வாழ்வில் முன்னேற வலியுறுத்துவது போல, நாட்டிற்கு நன்மை செய்யவும், நாட்டைக் காக்கும் பணிகளில் சேரவும் மாணவச் செல்வங்களை குடியரசு தின நன்னாளில் ஊக்குவித்தல் வேண்டும்.
வீடுகளில்..
குடியரசு தினத்தன்று, எனக்கென்ன என உறங்கிப் பொழுதைக் கழிக்காமல், காலையிலேயே எழுந்து பாரம்பரிய ஆடை அணிந்து, அந்த ஒரு நாளில் ஆவது வேற்று உடை மற்றும் உணவுகளைத் தவிர்த்து நமது பாரம்பரிய உணவுகளை சமைத்து உட்கொள்ள முயலுங்கள். மேலும் அக்கம் பக்கத்தாருடன் இணைந்து தங்களது குடியிருப்பு பகுதிகளில் குடியாரசு தினத்தை கொண்டாடி மகிழுங்கள்!
இதனால், அந்தந்த பகுதிகளில் இருக்கும் குழந்தைகள், சிறுவர்-சிறுமியர் குடியரசு தினத்தின் முக்கியத்துவம் உணர்வர்; அவர்களுக்காக நாட்டுப்பற்றை எடுத்துக் கூறும் கருத்துக்களை கற்பியுங்கள்; அவர்களுக்கான போட்டிகளை நடத்தி பரிசளியுங்கள். குழந்தைகளுக்கு இது போன்ற விஷயத்தை பள்ளி மட்டும் இல்லாமல், வீட்டிலேயேயும் கற்றுக் கொடுக்க முயலுங்கள்!
சமூகத்தில்..!
பொது இடங்களை, அந்தந்த பகுதிகளை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குடியரசு தினத்தின் அருமையை உணர்த்தும் வகையில் அலங்கரித்து, மக்கள் நாட்டுப்பற்று உணர்வை கொள்ளச் செய்யுங்கள். ஏழை எளிய மக்களுக்கு இந்த நன்னாளில் பாரம்பரிய உணவுகளை சமைத்து விருந்தளிக்க முயலுங்கள். நாட்டின் முக்கியத்துவத்தை குறிக்கும் அந்த ஒரு நாளிலாவது தங்களால் இயன்ற நற்காரியங்களை ஆற்ற முயலுங்கள்.! வாழ்க பாரதம்..! ஜெய் ஹிந்த்!