Today’s Live: விளையாட்டு வீரர்களுக்கு நாங்கள் அனைத்து ஆதரவையும் வழங்குவோம்..! முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்..!

விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவு:

டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நம் நாட்டை நேசிப்பவர்கள் காங்கிரஸ், ஆம் ஆத்மி அல்லது பாஜகவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு அளிக்க இங்கு வர வேண்டும். இந்த விளையாட்டு வீரர்களுக்கு நாங்கள் அனைத்து ஆதரவையும் வழங்குவோம். அவர்களின் குடிநீர், மின்சாரம் மற்றும் பிற அடிப்படை வசதிகளை மத்திய அரசு துண்டிக்கக் கூடாது என கூறினார்.

29.04.2023 5:50 PM

ஜீவனாம்ச நிலுவை தொகை:

இறந்த மகளின் ஜீவனாம்ச நிலுவைத் தொகையை பெற அவரது தாயாருக்கு உரிமை உள்ளது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலுவைத்தொகை ரூ.6,22,500-ஐ வழங்கக்கோரிய வழக்கில். அண்ணாதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், வாரிசுரிமை சட்டத்தின் படி, மனைவி இறந்துவிட்டால் அவரது சொத்துகள் குழந்தைகள், பெற்றோருக்கு சேரும் என உத்தரவளித்து, அண்ணாதுரை தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.

29.04.2023 4:40 PM

ராகுல்காந்தி வழக்கு:

ராகுல்காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணையை சூரத் செசன்ஸ் நீதிமன்றம் மே 2ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. மோடி பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இதில், ராகுல்காந்தியின் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கை மே 2ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

29.04.2023 4:15 PM

ANI ட்விட்டர் :

ANI செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியது. ANI ட்விட்டர் கணக்கை தொடங்கியவரின் வயது 13க்கும் கீழ் இருந்ததாக காரணம் கூறி ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.

29.04.2023 4:00 PM

அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்:

தமிழ்நாட்டில் மணல் கடத்தலை தடுக்க முயலும் அலுவலர்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ‘விஏஓ லூர்து பிரான்சிஸ் அவரது அலுவலகத்திலேயே வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் ஓமலூர் விஏஓ வினோத்குமாரை மணல் கடத்தல் கும்பல் கொலை செய்ய முயற்சித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மணல் கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

29.04.2023 3:50 PM

10 ஆண்டுகள் சிறை:

உத்தரபிரதேசத்தில் குண்டர் சட்டத்தில் மாஃபியா முக்தார் அன்சாரிக்கு காஜிபூர் எம்பி எம்எல்ஏ நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

29.04.2023 1:32 PM

இறையன்பு கடிதம்:

காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி கர்நாடக அரசுக்கு தமிழக தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், “பெங்களூரு நகர பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நேரடியாக காவிரி ஆற்றில் விடப்படுகிறது. இதனால், காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

29.04.2023 12:50 PM

பாதுகாப்பு:

WFI தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர். பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது மைனர் உட்பட மொத்தம் 7 வீரர்கள் டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை போலீசார் விரைவில் பதிவு செய்வார்கள். பிரிஜ் பூஷண் சரண் சிங், நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சர்வதேச போட்டிகளின் போது பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக டெல்லி போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.

29.04.2023 11:50 AM

ஆப்பிள் நிறுவனத்தில் திருட்டு:

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து உதிரி பாகங்களை திருடியும், கொள்முதல் செய்யாத பொருட்களுக்கு கணக்கு காட்டி சுமார் 17 மில்லியன் டாலர் (ரூ.139 கோடி) திருடியதற்காக அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திரேந்திர பிரசாத் ஆப்பிள் மற்றும் ஐஆர்எஸ் நிறுவனத்திற்கு 19 மில்லியன் டாலர் (ரூ.157 கோடி) அபராதம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. 10 ஆண்டுகள் பணியில் இருந்த இவர், 7 ஆண்டுகள் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

29.04.2023 11:00 AM

துரைசாமி கடிதம், துரை வைகோ பதில்:

குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ பதில் அளித்துள்ளார். மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அக்கட்சியின் அவைத்தலைவர் துரைசாமி கடிதம் எழுதி இருந்தார். இதற்கு விளக்கமளித்த துரை வைகோ, தொண்டர்கள் துரைசாமியின் கடிதத்தை பொருட்படுத்த வேண்டாம். கட்சி வளர்ச்சியை நோக்கி செல்கிறது என கூறினார்.

29.04.2023 10:35 AM

நான் நிரபராதி:

நான் நிரபராதி, விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். விசாரணை நிறுவனத்துடன் ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன். நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நான் மதிக்கிறேன் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் கூறியுள்ளார்.

29.04.2023 10:12 AM

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.