இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள்..!

இன்று தென்னிந்திய பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72 ஆவது பிறந்தநாள் ஆகும். 

தமிழ்த்திரையுலகில் தனது திறமையான நடிப்பால் மக்களை கவர்ந்த ரஜினிகாந்த் அனைவராலும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இவரது இயற்பெயர் சிவாஜி ராவ் கெயிக்வாட். திரைப்படங்களுக்காக தனது பெயரை ரஜினிகாந்த் என்று மாற்றி கொண்டார். ரஜினிகாந்த் டிசம்பர் 12, 1950 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்தார். ராமோசி ராவ் காயக்வாடுக்கும் ரமாபாய்க்கும் 4 ஆவது குழந்தையாக பிறந்தார்.

இவர் ஆரம்ப காலத்தில் பேருந்து நடத்துனராக பணிபுரிந்தார். பின்னர் நடிகராக வேண்டும் என்ற ஆர்வத்தோடு சென்னை வந்த இவர் திரைப்படக்கல்லூரியில் சேர்ந்து பயின்று முதன் முதலில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின்னர் வில்லனாக, அதிரடி நாயகனாக, நகைச்சுவை நடிகராக வித்தியாச கதாபாத்திரங்களில் நடித்து பெரும் வெற்றியை அடைந்துள்ளார். இவரது படங்கள் அனைத்தும் அதிரடி காட்சிகளோடும் நகைச்சுவை உணர்வோடும் இருப்பதால் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வண்ணம் இருக்கும்.

மேலும், இவர் இந்திய நடுவண் அரசின் விருதுகளான பத்ம பூஷன் விருது, பத்ம விபூஷண் விருது, தாதாசாகெப் பால்கே விருது போன்றவற்றையும், தமிழக அரசின் விருதுகளான கலைமாமணி, எம்.ஜி.ஆர். விருது போன்றவற்றையும் பெற்றுள்ளார். மேலும், 10 பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.