மியான்மர் கடற்படை மீட்ட தமிழக மீனவர்கள் நாளை தாயகம் வருகை…

தமிழகத்தை சேர்ந்த சென்னை ,திருவொற்றியூர், லட்சுமிபுரம், காசிமேடு, திரிசூலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 9 மீனவர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 23-ஆம்  தேதி கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் ஆகஸ்டு 7-ந் தேதி கரைக்கு திரும்புவதாக திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில், கடலில் ஏற்பட்ட அதிவேக கடல் சீற்றத்தால் மீனவர்களின் படகு தனது  கட்டுப்பாட்டை இழந்து தவித்து உள்ளனர். இவர்களை மியான்மர் நாட்டு கடற்படை வீரர்கள் காப்பாற்றி சென்றனர். இது குறித்து மீனவர் அமைப்பினர் அளித்த தகவலின் பேரில், மத்திய, மாநில அரசுகள் மியான்மர் நாட்டு வீரர்கள் உதவியோடு மீனவர்கள் தாயகம் திரும்ப விரைந்து நடவடிக்கை எடுத்தன.

அதன்படி, மீட்கப்பட்ட மீனவர்கள் நேற்று யாங்கூன் வந்தடைந்தனர். யாங்கூனில் இருந்து டெல்லி வழியாக நாளை (28-ந் தேதி) சென்னை புறப்படுகின்றனர். மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை நன்றி தெரிவித்து உள்ளது. மேற்கண்ட தகவல்கள் சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ஜஸ்டின் ஆண்டனி  அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

author avatar
kavitha