"கொரோனாவை தடுப்போம் குடையை பிடிப்போம்"- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அசத்தல் அறிவுரை.!

பொதுமக்கள் கையில் ஒரு குடை எடுத்துச் சென்றால், தனிமனித விலகல் கடைப்பிடிக்கப்பட்டு கொரோனா தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்க முடியும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் பாதிப்பும், உயிரிழப்பும் உயர்ந்துக்கொண்டே செல்கிறது. இதன் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய சேவைக்கு வெளியில் செல்லும் போது தனிமனித இடைவெளி மற்றும் முகக்கவசங்கள் அணிவதை பின்பற்றவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்திலும் கொரோனா தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பல்வேறு விதமான அறிவுரைகள் மக்களுக்கு கூறப்பட்டு வருகின்றனர்.

அதன்படி, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் சமூக விலகலை தக்க வைத்துக் கொள்ள குடைகளைப் பயன்படுத்துவதற்கான கேரளாவின் தனித்தன்மையான செயல், தமிழ்நாட்டின் ஓரிரு மாவட்டங்களிலும் கடைப்பிடிக்க தூண்டியுள்ளது. முழுமையான ஊரடங்கு முடிந்த நிலையில், அத்தியாவசியத் தேவைகளுக்காகக் கடைகளுக்குச் செல்லும், திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் கையில் ஒரு குடை எடுத்துச் சென்றால், தனிமனித விலகல் கடைப்பிடிக்கப்பட்டு கொரோனா தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்க முடியும் என அம்மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அதாவது, ஒருவர் குடையை எடுத்து வெளியே செல்லும்போது, எதிரில் இருப்பவரும் குடையுடன் இருப்பதால் இயல்பாகவே தனி மனித விலகல் உண்டாகிறது.

இதனால் தொற்றில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள, தற்போதைய தேவை தனிமனித விலகல்தான் என்று தெரிவித்துள்ளார். அரசிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கொரோனாவை முழுமையாக ஒழிக்க முடியும் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டுள்ளார். அதில், நல்ல விஷயங்களை மற்றவர்களை பார்த்து கற்றுக்கொள்வதில் தப்பில்லை என்றும் நம்மால் முடியும் இன்னும் 5 நாட்கள் இருக்கின்றது என்று கூறி, தன்னார்வலர்கள் கையில் குடையுடன், சமூக விலகலைக் கடைப்பிடித்த புகைப்படத்தையும் ஆட்சியர் பதிவிட்டுள்ளார். இதனிடையே திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் 112 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 83 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்