சுற்றுலாவுக்கு செல்கிறீர்களா? அப்போ இதெல்லாம் மறக்காம எடுத்து வச்சுக்கங்க..!

சுற்றுலா செல்வது சிலர் வீண் செலவாக நினைக்கிறார்கள். ஆனால் அந்த செலவு வீண் செலவல்ல. அது தேவையான ஒரு செலவுதான். நீங்கள் சுற்றி பார்க்கவோ அல்லது கோவில்களுக்கு சென்று சுற்றி பார்ப்பதற்காக பணத்தை சேமிப்பது நல்லது. நீங்கள் செல்லும் இடங்களுக்கு முன்பதிவு செய்து பயணசீட்டு பெற்று விடுங்கள். மேலும், ரயிலாக இருந்தால் எந்த இருக்கை என்பதையும் பஸ் என்றால் நேரத்தையும் சரியாக தெரிந்து கொண்டு அனைவரும் சென்று ஏறுங்கள். மேலும் அனைத்து விவரங்களையும் செல்லும் அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம். முதலில் நீங்கள் செல்லும் இடங்களுக்கு என்னென்ன பொருட்கள் வேண்டும், பின்னர் சென்ற இடங்களில் என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்பதையெல்லாம் பட்டியல் போட்டு எடுத்துக்கொள்ளுங்கள். மேலும், நீங்கள் செல்லும் இடங்களில் முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்கள் என்ன என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள். அதற்கான தகவல், செல்ல கூடிய வழி போன்றவற்றை அறிந்து கொள்ளுங்கள்.

சுற்றுலாவிற்கு செல்லும் பொழுது உங்களுக்கு தேவையான ஆடைகள், சோப்பு, பவுடர், பொட்டு என அவசியமான அனைத்தையும் எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் செல்லும் இடங்களில் இவற்றை வாங்குவது கடினம். சுற்றுலா செல்லும் பொழுது கையில் தேவையான பணத்தை மட்டும் வைத்து கொள்ளுங்கள். ஏ.டி.எம். கார்டை எப்போதும் வைத்திருங்கள். மேலும், உங்களது முக்கிய அடையாள அட்டைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள். சுற்றுலாவிற்கு விலை உயர்ந்த நகைகளை அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும். எளிமையான நகை அணிவது நல்லது. மேலும், உங்கள் வீட்டில் விலையுயர்ந்த தங்க நகை, வைர நகை இருந்தால் அதனை வங்கி பெட்டியில் வைத்து விட்டு போவது நன்மை தரும். மேலும், நெடுதூர பயணம் என்றால் வீட்டிலேயே சாப்பாடு செய்து எடுத்து செல்வது சுகாதாரமானது. உங்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை எடுத்து செல்லுங்கள்.