சொன்னதை செய்த டிரம்ப்.. அமெரிக்காவில் டிக்டாக், வீசாட் தடை.!

அமெரிக்காவில் பிரபல சீன செயலிகளான டிக்டாக் மற்றும் வீசாட்  செயலிகளுக்கு தடைவிதித்து உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி சீனாவை சேர்ந்த 59 செயலிகளுக்கு தடைவித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன் பின்னர் சில செயலிகள் தொடர்ச்சியாக தடைசெய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் இந்த செயலை அமெரி்க்க அரசு வெகுவாகப் பாராட்டியது.

இந்நிலையில், அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்யப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரம் காட்டி  வந்தார். அதன் பின்னர் செப்டம்பர் 15-க்குள் பைட்டான்ஸ் நிறுவனம் டிக்டாக்கை ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்றுவிட வேண்டும் என்றும் இல்லை என்றால் அமெரிக்காவில் டிக்டாக் முற்றிலுமாக தடைசெய்யப்படும் என்று எச்சரித்தார்.

டிக்டாக் கை வாங்கும் நிறுவனம் அமெரிக்க நிறுவனமாக இருக்க வேண்டும். அப்படி இருக்கையில் எங்களுக்கு எந்த பாதுகாப்பு பிரச்சனையும் இல்லை, மேலும் டிக்டாக் கை வாங்கும் நிறுவனம் அமெரிக்க அரசுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கிடையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக் செயலியை வாங்கி சமூகவலைதளத்தில் கால்பதிக்க தீவிரம் காட்டி அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று அதிபர் டொனால்ட் டிரம்ப் டிக்டாக் மற்றும் வீசாட் செயலிக்கு தடைவிதித்து உத்தரவிட்டார். டிக்டாக் மற்றும் வீசாட்டை ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க தவறும் பட்சத்தில் அந்த இரு செயலிகளும் முற்றிலுமாக தடைசெய்யப்படும் என்றும் இந்த தடை உத்தரவு அடுத்த 45 நாட்களில் இருந்து நடைமுறைக்கு வரும் எனவும் இந்த தடை உத்தரவை அமல்படுத்த வர்த்தகத்துறை அமைச்சகத்துக்கு அதிகாரம் அளிக்கிறேன் என கூறி  தடை உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

 

.

 

 

 

author avatar
Castro Murugan