தூத்துக்குடி துப்பாக்கி சூடு:சி.பி.ஐ-க்கு ஆணை பிறப்பித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை …!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13பேர் இறந்த வழக்கில் சிபிஐ விளக்க அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை .

ஸ்டெர்லைட் போராட்டம்:

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை  மூடிட வலியுறுத்தி கடந்த மே 22-ம் தேதி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி  முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.அப்போது போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் காவல்துறை  தடியடியும் துப்பாக்கிச்சூடும் நடத்தியது. இதில், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்தத் துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகத் தூத்துக்குடியில் உள்ள  சிப்காட் காவல்நிலையம், தென்பாகம், வடபாகம், மத்திய பாகம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 காவல் நிலையங்களில் மொத்தம் 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

Image result for sterlite protest

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம், இது தொடர்பான 243 வழக்குகளில் 173 வழக்குகளை சிப்காட் போலீஸார் பதிவு செய்துள்ளதை ஒரே வழக்காக விசாரணை செய்ய வேண்டும். மீதமுள்ள வழக்குகளைத் தனித்தனியாக விசாரணை செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து இது தொடர்பான 5 முக்கிய வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் இந்த 173 வழக்குகள் தொடர்பான ஆவணங்களைப் பெற்று விசாரணையைத் தொடங்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றிட  கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது 12 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

Related image

வன்முறை  தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து நடவடிக்கை எடுத்தது.

கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் துப்பாகிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.தற்போது விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அர்ஜுனன் உள்ளிட்ட 7 பேர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.அதில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக எஸ்.பி.மகேந்திரன், ஆய்வாளர் ஹரிகரன் உள்ளிட்ட 7 பேர் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இல்லை என்றும் துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதியவில்லை மனுவில் தெரிவிக்கப்பட்டது.இதில்  ஜனவரி  21-ஆம் தேதிக்குள் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Leave a Comment