இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் கடந்த சில மாதங்களுக்கு முன்பே படக்குழு படமாக்கிவிட்டனர்.

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் பற்றி நெகிழ்ச்சியாக பேசி சுவாரசியமான தகவல் ஒன்றையும் கொடுத்துள்ளார். ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய மிஷ்கின் ” ஒரு இயக்குனராக நான் சொல்கிறேன் இந்திய அளவில் லோகேஷ் கனகராஜ் ஒரு பெரிய இயக்குனராக வளர்ந்து கொண்டிருக்கிறார்.

லியோ படத்தை தொடர்ந்து ரஜினி சாரை வைத்து ஒரு படம் இயக்குகிறார். இது எல்லாம் மிகவும் பெரிய விஷயம். இது தான் ரஜினியின் கடைசி படமாக இருக்கலாம் என சொல்கிறார்கள்” என கூறியுள்ளார். ஏற்கனவே ரஜினிக்கு லோகேஷ் ஒரு கதை கூறியதாக தகவல்கள் வெளியான நிலையில், மிஷ்கின் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை முடித்த பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.