மத சார்பின்மைக்கும், மதவாதத்திற்கும் இடையேயான தேர்தல் இது – திருமாவளவன்..!

இந்த தேர்தலை மத சார்பின்மைக்கும், மதவாதத்திற்கும் இடையேயான தேர்தலாக பார்க்கிறோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சென்று முக ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தல் என்பது 2 அணிகளுக்கான பதவிக்கான போட்டி அல்லது அரசியல் அதிகாரத்திற்க்கான போட்டி என்று நாங்கள் பார்க்கவில்லை. மத சார்பின்மைக்கும், மதவாதத்திற்கும் இடையேயான தேர்தலாக பார்க்கிறோம்.

சமூக நீதியை பாதுகாக்க, ஜனநாயகத்தை பாதுகாக்க, மத சார்பின்மையை பாதுகாக்க திமுக தலைமையிலான இந்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி களமிறங்குகிறது. இந்த மண்ணில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கை வாரிசு முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்கிற வகையில் தமிழ்மண்ணை சமூகநீதி மண்ணாக பக்குவப்படுத்தியுள்ளார்கள்.

இதனால் தான் கடந்த அரைநூறு ஆண்டுகளுக்கு மேலாக இங்கே சாதி, மத வெறியர்களுக்கு அரசியல் களத்தில் கால் ஊன்ற முடியாத நெருக்கடி ஏற்பட்டது என தெரிவித்தார். திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan