அதிகார துஷ்பிரயோகம் இது., திமுக – காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும் – முக ஸ்டாலின்

ஜனநாயகம் காப்பதில் முதலமைச்சர் நாராயணசாமியின் துணிச்சலை வாழ்த்துகிறேன் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்திருந்தார். இதையடுத்து, முதல்வர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்வதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து கடிதத்தை அளித்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திரைமறைவு பேரங்கள் – ஜனநாயகப் படுகொலையை இலட்சியமாகக் கொண்ட மத்திய பாஜக அரசு அதனைப் புதுச்சேரியிலும் அரங்கேற்றியிருக்கிறது என்றும் அதிகார துஷ்பிரயோகம் இது எனவும் கூறியுள்ளார்.

பாஜகவின் மக்கள் விரோத செயல்பாடுகளையும், சட்ட அத்துமீறல்களையும் பேரவையில் எடுத்துரைத்து ராஜினாமா செய்திருக்கிறார் முதல்வர் நாராயணசாமி. ஜனநாயகம் காப்பதில் அவரின் துணிச்சலை வாழ்த்துகிறேன். திமுக – காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும் என்றும் தெரிவித்துள்ளார். கிரண் பேடியை கொண்டு மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசின் உரிமைகளை பறித்தது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், குதிரை பேரம் நடத்தினார்கள். தமிழிசையை துணைநிலை ஆளுநராக நியமித்த போதே கண்டித்தேன். தமிழகத்தில் அடிமை அதிமுகவை வைத்து ஆட்சி நடத்துவதுபோல புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் மூலம் மறைமுக ஆட்சி நடத்திட முயற்சித்தால் நீதிமன்றத்தில் எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் திமுக துணை நிற்கும் என கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்