தனது பெயர், புகைப்படம் மற்றும் குரல் போன்றவற்றை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி வருவதாக சச்சின் டெண்டுல்கர் புகாரளித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தனது பெயர், புகைப்படம் மற்றும் குரல் போன்றவற்றை இணையத்தில் போலியான விளம்பரங்களில் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி வருவதாக மும்பை குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து, SRT ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் வெளியிட்ட அறிக்கையில், சச்சின் டெண்டுல்கருடன் தொடர்பில்லாத பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பனை செய்து, அங்கீகரிக்கப்படாத வகையில் அவரது பெயர், மற்றும் புகைப்படங்களை வைத்து ஆள்மாறாட்டம் செய்யும் முயற்சிகள் நடப்பதை நாங்கள் கவனித்துள்ளோம்.
இந்த விவரம் குறித்து நாங்கள் சைபர் செல் பிரிவில் அதிகாரப்பூர்வ புகாரை பதிவு செய்துள்ளோம், இதுபோன்ற தவறான விளம்பரங்களை கண்டால், தயவு செய்து அதைப் புகாரளிக்கவும். ஆன்லைனில் பொருட்கள் மற்றும் சேவைகளை ஷாப்பிங் செய்யும் போது, குடிமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
