“இரயில் சேவைகள் நிறுத்துவது பற்றி எந்த திட்டம் இல்லை”- இரயில்வே வாரிய தலைவர் சுனித் சர்மா விளக்கம்….!

நாடெங்கும் கொரோனோ 2ம் அலைத் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த சூழலில்,ஊரடங்கு அச்சத்தால் வெளிமாநிலத்தவர்களின் கூட்டம் இரயில்களில் அலைமோதுகிறது.இதனால் இரயில் சேவை நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் அது குறித்து இரயில்வே வாரியத்தின் தலைவர் சுனித் சர்மா விளக்கமளித்துள்ளார்.

கொரொனோ வைரஸின் தாக்கம் மிக வேகமாக பரவி வருவதனால் நாட்டின் பல்வேறு நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.ஆகவே கடந்த ஆண்டைபோல இந்த ஆண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சத்தினால் இரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.இதனால் இரயில் சேவைகள் முழுமையாக நிறுத்தப்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து இரயில்வே வாரியத்தின் தலைவர் சுனித் சர்மா கூறுகையில்,”இரயில் சேவைகளை நிறுத்தவோ,குறைப்பது பற்றியோ எந்த திட்டமும் இல்லை,கூட்ட நெரிசல் காரணமாக வருகிற மே மாதம் முதல் சுமார் 120 இரயில்களை கூடுதலாக இயக்க உள்ளோம்,மேலும் இரயில்கள் அதிகம் தேவைப்படுவது குறித்து மாநில அரசுகள் கேட்டுக்கொண்டால் அடுத்தடுத்து கூடுதல் இரயில்கள் இயக்கப்படும்.ஆகையினால் இரயில் பற்றாக்குறை இருக்காது.எனவே மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்”,என்று தெரிவித்துள்ளார்.