தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த தனது கருத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை – நடிகர் ரஜினிகாந்த்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்த தனது கருத்திற்கு எந்த ஆதாரமும் தன்னிடம் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, 13 பேர் உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நீதி விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற தமிழக அரசு நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிடப்பட்டது. இந்த கமிஷன் சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

27 கட்டமாக நடைபெற்ற விசாரணையில் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயம்பட்டவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், வழக்கறிஞர்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் என பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள வழக்கறிஞர் அருள் வடிவேல் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர் 27 வது கட்ட விசாரணையில் 48 பேர் ஆணையம் முன்பு ஆஜராகி தங்களது வாக்குமூலங்களை பிரமாண பத்திரங்களை அளித்துள்ளதாகவும், ஆயிரத்துக்கும் அதிகமான பேருக்கு துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டு 700க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்ட விசாரணையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினரை விசாரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கொரோனா தொற்று குறைந்த உடன் நடிகர் ரஜினிகாந்திடம் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ஒரு நபர் ஆணையம் நிச்சயம் விசாரணை நடத்தும் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் ஏற்கனவே ரஜினிகாந்த் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியதற்கு அவர் வழக்கறிஞர் மூலமாக தனது பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது எதேச்சையாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தான் தெரிவித்த கருத்திற்கு தன்னிடம் எந்த ஆதாரமும் இல்லை என அந்த மனுவில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். ஆனால் கொரோனா தொற்று குறைந்த பின்பு நிச்சயம் ரஜினிகாந்திடம் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal