கோவாக்சின் உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக்கிலிருந்து ‘கூடுதல் தகவல்’ தேவை- WHO உத்தரவு..!

கோவாக்சின் தடுப்பூசி மருந்தின் அவசரகால பயன்பாட்டு பட்டியலுக்கு,பாரத் பயோடெக்கிலிருந்து ‘கூடுதல் தகவல்’ தேவை என்று WHO தெரிவித்துள்ளது.

கோவாக்சின் தடுப்பூசிக்கு,அவசரகால பயன்பாட்டு பட்டியலை (EUL) பெறுவதற்கு ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி WHO வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் சமர்பித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து,பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் (பிபிஐஎல்) நிறுவனம்,கோவாக்சின் தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டு பட்டியலை (ஈயூஎல்) பெறுவதற்காக,ஏற்கனவே 90 சதவீத ஆவணங்களை உலக சுகாதார அமைப்புக்கு சமர்ப்பித்துள்ளதாகவும், மீதமுள்ள ஆவணங்கள் ஜூன் மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என்றும்,மேலும்,கோவாக்ஸின் தடுப்பூசியை அவசர கால பயன்பாடு பட்டியலில் சேர்ப்பது தொடர்பான முதல்நிலை கூட்டத்தை மே-ஜூன் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசிடம் தகவல் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில்,மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் பயோடெக் துறையின் மூத்த அதிகாரி பிபிஐஎல் எம்.டி டாக்டர் வி கிருஷ்ணா மோகன்,கோவாக்சினுக்கான விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிய, முக்கிய அதிகாரிகளுடனான கூட்டத்தை நடத்தினார்.அதில்,மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லா,சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரிகள் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

அந்தக் கூட்டத்தின் போது,கோவாக்சின் ஏற்கனவே 11 நாடுகளிடமிருந்து ஒழுங்குமுறை ஒப்புதல் பெற்றுள்ளது என்றும்,ஏழு நாடுகளில் உள்ள மற்ற 11 நிறுவனங்களிடமிருந்தும் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் கோவாக்சின் உற்பத்திக்கு ஆர்வம் இருப்பதாகவும்,

மேலும்,அமெரிக்காவில் கோவாக்சினின் சிறிய அளவிலான மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்காக,அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகளின் இறுதி கட்டத்தில்  நிறுவனம் உள்ளது என்றும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில்,கொரோனாவுக்கு எதிரான கோவாக்சின் தடுப்பூசிக்கு, அவசரகால பயன்பாட்டு பட்டியலை (EUL) பெறுவதற்கு பாரத் பயோடெக்கிலிருந்து “கூடுதல் தகவல்கள்” தேவை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.