கேரளா ஸ்டோரி படத்திற்கு ஏன் தடை.? உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கொடுத்த மேற்கு வங்கம் மற்றும் தமிழகம்.! 

0
301
The Kerala Story
The Kerala Story Movie Poster {Image source : Twitter/@sunshinepicture}

கேரளா ஸ்டோரி படத்திற்கு ஏன் தடைவிதிக்கப்பட்டுள்ளது என மேற்கு வங்க அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கொடுத்துள்ளது. தமிழக அரசும் தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளது. 

தி கேரளா ஸ்டோரி எனும் பாலிவுட் திரைப்படமானது ஹிந்தி, தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்திற்கு மேற்கு வங்க அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் இந்த படத்தை திரையிட மறுத்துவிட்டனர்.

இந்த தடைகளை எதிர்த்து தி கேரளா ஸ்டோரி படத்தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. மேற்கு வங்கத்தில் அரசின் தடையை நீக்க கோரியும், தமிழகத்தில் மறைமுக தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும் மனுவில் படத்தயாரிப்பாளர் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு குறித்து விளக்கம் அளித்த மேற்கு வங்க அரசு, தி கேரளா ஸ்டோரி படம் உண்மைகளை திரித்து கையாண்டுள்ளது. வெறுக்கத்தக்க பேச்சுக்கள் அப்படத்தில் உள்ளன. வகுப்புவாத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் படத்தின் காட்சிகள் உள்ளன. இந்த கருத்துக்கள் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும். எனவும்,

இந்த காரணங்களால், மேற்கு வங்க சினிமா ஒழுங்குமுறைச் சட்டம் 1954ன் பிரிவு 6(1)ன் கீழ் திரைப்படத்தின் பல காட்சிகளில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பேச்சுக்கள் இருப்பதாக எங்களுக்கு கிடைத்த உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் இந்த படத்தை மாநிலத்தில் தடை செய்துள்ளோம் என மேற்கு வங்க அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

இதனை அடுத்து , மறைமுக தடை விதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தமிழக அரசு , படத்தின் விமர்சனம், தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த முகங்கள் இல்லாதது, மோசமான நடிப்பு, பார்வையாளர்களின் வரவேற்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் திரையரங்கு உரிமையாளர்கள் தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிட விரும்பவில்லை என்றும், மறைமுக தடை எதுவும் விதிக்கப்படவில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்தது.

இந்த வழக்கு குறித்து ஏற்கனவே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு, நாட்டின் பிற பகுதிகளில் ஓடும் திரைப்படத்தை மேற்கு வங்க மாநிலம் ஏன் படத்தைத் தடை செய்கிறது. பொதுமக்கள் பார்க்கத் தகுந்தது அல்ல என்று எப்படி தீர்மானித்தீர்கள்? என்று மாநில அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். இரு மாநில விளக்கங்களையும் அடுத்து இன்று தி கேரளா ஸ்டோரி திரைப்பட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.