திருமண நிகழ்ச்சியை கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியாக மாற்றி நடைபெற்ற திருமணம்.! மொய்கவரில் கபசுர குடிநீரும், மாஸ்கும்.!

தூத்துக்குடியில் அரசு விதிமுறைகளை பின்பற்றி நடந்த திருமண நிகழ்ச்சியில் சமூக இடைவெளி மற்றும் மாஸ்க்கின் அவசியம் குறித்து வலியுறுத்தி பேனர்கள் வைத்ததோடு மொய்கவரில் கபசுர குடிநீர் மற்றும் மாஸ்க் வழங்கி அசத்தியுள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பல கட்டுபாட்டுகளுடன் திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் நடந்த பொறியாளர்களான கௌதம் குமார் மற்றும் மனோகிரியின் திருமணம் பெரும் அரசு விதிமுறைகளை சரியாக பின்பற்றி வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர்களின் திருமணத்துக்கான பேனர்களில் முககவசம் அணிவதன் கட்டாயத்தையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதை வலியுறுத்தியும் அசத்தியுள்ளனர்.

அதே போன்று திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்கும் விதமாக பன்னீர் தெளித்துவரவேற்பது வழக்கம். அதே போல இங்கு பன்னீருக்கு பதிலாக கிருமிநாசினி தெளித்தும், காய்ச்சல் கண்டறியும் தெர்மோ ஸ்கேன் மற்றும் சானிடைசர் பயன்படுத்தியும் வரவேற்றுள்ளனர். மேலும் திருமண விழாவிற்கு வந்தவர்களுக்கு மொய்கவரில் கபசுர குடிநீர் மற்றும் மாஸ்க் வழங்கி திருமண நிகழ்ச்சியுடன் கொரோனா விழிப்புணர்வையும் ஏற்படுத்தி அசத்தியுள்ளனர். அரசு விதிமுறைகளை பின்பற்றி நடந்தால் கொரோனாவை விரட்ட முடியும் என்பதற்கிணங்க நடைபெற்ற இந்த திருமணம் அனைவரின் கவனத்தை ஈர்த்ததோடு பாராட்டுகளையும் பெற்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.