வெற்றி பெறும் வரை போர் தொடரும் – இஸ்ரேல் பிரதமர்..!

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தொடங்கி இரண்டரை மாதங்களுக்கு மேலாகியும், இஸ்ரேல் பிணைக்கைதிகள் அனைவரும் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இஸ்ரேல் பிரதமருக்கு அவரது சொந்த நாட்டிலும் எதிர்ப்பு அதிகரித்து வருவதற்கு இதுவே காரணம். சமீபத்தில் வடக்கு காசாவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பயணம் மேற்கொண்டார். அவருடன் ராணுவ தலைமை தளபதிகளும் சென்றனர். காசாவில்  ராணுவ வீரர்களை இஸ்ரேல் பிரதமர் சந்தித்து பேசினார்.

காசாவில் இருந்து திரும்பிய இஸ்ரேல் பிரதமர் நேற்று  பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.  அப்போது, “காஸா பகுதியில் ஹமாஸால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள பொதுமக்களை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பிணைக்கைதிகளை மீட்பதற்கு அதிக நேரம் எடுக்கும் என்று இஸ்ரேல் வெற்றி பெறும் வரை எங்களது நடவடிக்கை தொடரும்” என்று கூறினார். இதனால், அவரின் பேச்சு பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தங்களது உறவினர்கள் பிணைக்கைதிகளாக 80 நாட்களுக்கு மேலாக உள்ளனர். ஒவ்வொரு நிமிடமும் நரகமாகி வருகிறது. தங்களது குடும்ப உறுப்பினர்களை உடனடியாக மீட்க வேண்டும் என பிணைக்கைதி உறவினர்கள் வலியுறுத்தினர். மேலும், பிணைக்கைதிகளின் உறவினர்கள் கைகளில் பதாகைகள் வைத்திருந்தனர். அதில் பிணைக்கைதிகளின் புகைப்படங்கள் மற்றும் பெயர்கள் எழுதப்பட்டு இருந்தது. ஹமாஸின் சிறைப்பிடிப்பில் 129 இஸ்ரேலிய பிணைக்கைதிகள் இருந்ததாகவும் அதில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களின் உடல்கள் காசாவில் உள்ளதாகவும் 107 பேர் இன்னும் ஹமாஸின் சிறைப்பிடிப்பில் உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், அக்டோபர் 7 முதல் ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேல் நாட்டு குடிமக்களை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்துமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வேண்டுகோள் விடுத்துள்ளார். காஸாவில் உள்ள அகதிகள் முகாம் மீதான தாக்குதலுக்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. 

இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் காசா நகரின் பொதுமக்கள் , ஹமாஸ் அமைப்பினர் என 20,057 பேர் உயிரிழந்தனர் என்றும் 53,320 பேர் போரில் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.