அடடா!அட்டகாசமான மகளிருக்கான இலவச பயண வழிகாட்டு நெறிமுறைகள்- தமிழக போக்குவரத்து துறை அறிக்கை..!

மகளிருக்கான இலவச பயண வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அறிக்கையை தமிழக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின்,முதல் நாளிலேயே 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.அதில்,அனைத்து மகளிரும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற கோப்பும் ஒன்றாக இருந்தது.பின்னர்,அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

அதன்படி,தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் அனைத்து சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும்,பேருந்து பயண அட்டை இல்லாமலும் கடந்த மே 8 ஆம் தேதியிலிருந்து பயணித்து வருகின்றனர்.

மேலும்,பெண்களுக்கு குழப்பம் ஏற்படாத வகையில்,தமிழக அரசின் அனைத்து சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் “மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை” என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில்,மகளிருக்கான இலவச பயண வழிகாட்டு நெறிமுறைகளையும் போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.அதன்படி,

  • பேருந்திற்காக நிற்கும்போது பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டும்.ஒருவர் நின்றாலும் பேருந்தை நிறுத்த வேண்டும்.
  • ஓட்டுனர் பேருந்தை பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும்.பேருந்து நிறுத்தத்திற்கு முன்போ,தாண்டியோ நிறுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது.
  • நடத்துனர் வேண்டும் என்றே பேருந்தில் இடமில்லை என்று ஏறும் பெண் பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கி விடக் கூடாது.
  • வயது முதிர்ந்த மகளிர்களுக்கு இருக்கையில் அமர உதவி புரிய வேண்டும்.
  • பேருந்தில் பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ,ஏளனமாகவோ,இழிவாகவோ பேசக்கூடாது.
  • பெண் பயணிகள் ஏறும் போதும்,இறங்கும் போதும் கண்காணித்து ஓட்டுனருக்கு சமிக்ஞை(சிக்னல்) செய்து ஏற்றி,இறக்க வேண்டும்.
  • பேருந்தில் பெண் பயணிகளிடம் உபசரிப்புடனும்,அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.