இன்று முதல் தமிழகத்திலிருந்து…அரசின் அசத்தல் அறிவிப்பு!

தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்து இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று தீவிரமாக பரவியதன் காரணமாக கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்ப கோவிலில் கடந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் சாமி தரிசனம் செய்ய தினமும் மிகக்குறைந்த பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர்.அதன்பின்னர்,கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் சாமி தரிசனம் செய்ய தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப் படுகிறார்கள்.இதற்கான,முன்பதிவு ஆன்லைனில் தொடங்கி நிறைவு பெற்றுள்ளது.

மேலும்,ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள்,முன்பதிவு செய்துள்ள நாட்களில், குறிப்பிட்டுள்ள நேரத்தில் சாமி தரிசனம் செய்யும் வகையில் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேசமயம்,பக்தர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுத்த கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர் நெகடிவ் சான்று,அல்லது  2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை கட்டாயம் கொண்டு வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு இன்று முதல் 64 சிறப்பு பேருந்து இயக்கப்படும் என்று தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.அதன்படி,சென்னை, திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து மிதவை பேருந்துகள் இயக்கப்படும் எனவும்,இன்று முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாக்களுக்கு பக்க்தர்கள் சென்று வர ஏதுவாக இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.