#Breaking : ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை.! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர், கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த மாபெரும் போராட்டத்தை அடுத்து ஜல்லிக்கட்டுக்கு தமிழகத்தில் அனுமதி வழங்கப்பட்டது. அதற்கான அவசர சட்டமும் இயற்றப்பட்டது. அதிலிருந்து ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டுகள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், தமிழக அரசு வகுத்த அவசர சட்டத்திற்கும் தடை விதிக்க வேண்டும் எனவும் பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணையானது, நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் அப்போதைய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் ஆகியோர் தமிழக அரசு சார்பில் தங்கள் வாதங்களை முன் வைத்தனர். தமிழக அரசானது வாதிடுகையில்,  ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று. அது தமிழர்களின் அடிப்படை உரிமை, கலாச்சாரம்.’ என்று தங்கள் வாதங்களை முன் வைத்தது.

அதேபோல் இதற்கு எதிர்வாதமாக பீட்டா விலங்குகள் நல வாரியம், சதி எனும் உடன்கட்டை ஏறுதல், குழந்தை திருமணம் உள்ளிட்டவையில் கூட கலாச்சாரம் என்று அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் அவை தடை செய்யப்பட்டன என்று குறிப்பிட்டனர். மேலும்,  ஜல்லிக்கட்டு என்பது ஒரு கொடூரமான விளையாட்டு. எந்த ஜல்லிக்கட்டு களையும் உடன்பட்டு இந்த விளையாட்டில் அனுமதிக்கப்படுவதில்லை. அவைகள் கூட்டத்தை கண்டு மிரண்டு ஓடுகின்றன என்று வாதிட்டனர்.

அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதி இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில், எந்தவித ஆயுதங்களும் பயன்படுத்தப்படுவதில்லை. மற்ற நாடுகளைப் போல ஆயுதங்களுடன் காளைகளை எதிர்கொள்வதில்லை. எதிர்பாராவிதமாக ரத்த காயங்கள், உயிர் பலி உள்ளிட்டவை ஏற்படுகிறது. அது கொடூரமானது இல்லை. ஜல்லிக்கட்டு காளையை யாரும் கொல்வது இல்லை. என கூறி , மலையேற்றத்தின் போது எதிர்பாரா விதமாக பலர் உயிரிழந்துள்ளனர். அதனால் மலையேற்றத்தை தடை செய்துவிட முடியுமா? என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பீட்டா அமைப்புக்கு சரமாரி கேள்விகளை எழுப்பி இருந்தார்.

இந்த வழக்கின் இறுதி வாதங்கள் அனைத்தும் கடந்த டிசம்பர் மாதமே நிறைவுற்று, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு மே 18 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது இந்த தீர்ப்பு வெளியாகி உள்ளது தீர்ப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.

ஜல்லிக்கட்டு தீர்ப்பு :

ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு வாதம் திருப்தி அளிக்கும் விதமாக உள்ளது. என கூறி , தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.