Noise underwater

கடலுக்கடியில் கேட்ட அந்த சத்தம்.! காணாமல் போன 5 பேரை தேடும் பணி தீவிரம்.! கனடா ராணுவம் புதிய தகவல்.!

By

கடலுக்கடியில் மூழ்கிய டைட்டானிக்கை சுற்றிப்பார்க்க சென்று தொலைந்துபோன 5 பேரைத் தேடும் போது கனடாவின் மீட்புக்குழு கண்டறிந்த புதிய தகவல்.

டைட்டானிக் சுற்றுலா:

பல வருடங்களுக்கு முன்பு கடலுக்கடியில் மூழ்கிய உலகின் மிகப்பெரிய கப்பல் எனக்கருதப்படும் டைட்டானிக் கப்பலை சுற்றிப்பார்க்க, அமெரிக்காவின் ஓசன்கேட் நிறுவனம் ஏற்பாடு செய்த பயணத்தில்,  சென்ற 5 பேரும் வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் காணாமல் போன சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி ஆக்கியுள்ளது.

5 பேர் மாயம்:

டைட்டன் என்ற நீர்மூழ்கிக்கப்பலில் பிரிட்டிஷ் நாட்டவரான ஹமிஷ் ஹார்டிங், பாகிஸ்தானை சேர்ந்த ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான், ஓசன்கேட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான பைலட் ஸ்டாக்டன் ரஷ் மற்றும் பிரெஞ்சு ஆய்வாளர் மற்றும் நிபுணரான பால்-ஹென்றி நர்கோலெட் ஆகியோர் இதில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

தேடுதல் பணி தீவிரம்:

இந்த டைட்டன் என்ற நீர்மூழ்கிக்கப்பல் கடந்த 18 ஆம் தேதி பயணத்தை தொடங்கிய 1 மணிநேரம் 45 நிமிடங்களில், தனது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் 5 பேரையும் தேடும் பணியில் அமெரிக்க கடலோரக்காவல்படை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது, இதனுடன் கனடாவைச் சேர்ந்த மீட்புக்குழுவும் தேடுதல் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

கடலுக்கடியில் சத்தம்:

இந்த நிலையில் இன்று அதிகாலை தேடுதல் பணியில் ஈடுபட்டிருக்கும் போது, கடலுக்கடியில் ஏதோ சத்தம் கேட்டதாக கனடா கடலோர மீட்புக்குழு கண்டறிந்துள்ளது. இதனை அமெரிக்க கடலோரக்காவல்படை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. இருப்பினும் அமெரிக்க கடலோரக் காவல்படையின் அறிக்கை, இது என்ன சத்தம் என்பதை விரிவாகக் கூறவில்லை.

கனடாவின் P-3 ஓரியன் தேடலுக்கு பிறகான தகவல் வந்ததை அடுத்து, அமெரிக்க கடலோர காவல்படை வெளியிட்ட அறிக்கையில், சத்தம் வந்ததாகக் கூறப்படும் பகுதியில் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு சத்தம் வருவதாகக் கூறியது. மேலும் நீருக்கடியில் சத்தம் பல்வேறு காரணங்களால் வரலாம் என்று கூறப்படுகிறது.

சோனார் மிதவை:

இந்த தேடுதலுக்காக கனடாவும், நீர்மூழ்கிக்கப்பல் மற்றும் இரண்டு மிதவைக் கப்பல்களையும் வழங்கி உதவியுள்ளது. இது டைட்டனில் இருந்து வரும் எந்த ஒலியையும் கேட்கும் சோனார் மிதவைகளையும் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. டைட்டன் நீர்மூழ்கிக்கப்பலின் ஆக்சிஜன் நாளை காலை வரை மட்டுமே இருக்கும் என்பதால் தேடுதல் பணி மிகத்தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

நீருக்கடியில் சென்று தேடுவதற்கு ரோபோ ஒன்று இறங்கியுள்ளது. சிபிஎஸ் ஊடகவியலாளர் டேவிட் போக், கடந்த ஆண்டு இதே டைட்டனில் பயணித்துள்ளதால் அவர் இது குறித்து கூறும்போது ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும் பாதுகாப்பு பிங்ஸ்கள் இன்னும் வேலை செய்வதாக தெரிவித்தார்.

நம்பிக்கை:

இதனால் மீட்பு பணிக்கு சற்று நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது. எப்படியானாலும் மீட்புப்பணியினரின் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.