இன்று 19வது ஆசிய விளையாட்டு போட்டி ஆனது சீனாவின் ஹாங்சோவ் நகரில் இன்று மாலை கோலாகலமாக தொடங்குகிறது. இந்த ஆசிய விளையாட்டு போட்டியை சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைக்கிறார். இன்று சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கும் 19வது ஆசிய விளையாட்டு போட்டி அக்.8 வரை நடைபெற உள்ளது.
பிக் லோட்டஸ் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற ஹாங்ஜோ ஒலிம்பிக் விளையாட்டு மைய அரங்கில் இதற்கான தொடக்கவிழா நடைபெறுகிறது. இந்த விளையாட்டு அரங்கில் 80,000 பார்வையாளர்கள் வரை அமரக்கூடிய இருக்கைகள் உள்ளது. அனைத்து போட்டிகளும் ஹாங்சோவில் உள்ள 56 அரங்குகள் மற்றும் மைதானங்களில் நடைபெறுகிறது.
சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். ஆசிய விளையாட்டு போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர், வீராங்கனைகள் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கின்றன.
ஆசிய போட்டியில் பங்கேற்க இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 699 வீரர், வீராங்கனைகளை 39 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். இதில் 48 வீரர்கள் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். இதனால் முதல்வர் பகவந்த் சிங் மானின் அறிவுறுத்தலின் பேரில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் பஞ்சாபின் 58 வீரர்களுக்கு மொத்தம் ரூ.4.64 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.8 லட்சம் ரொக்கப்பணம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு 8 லட்சம் ரூபாய் வழங்கிய பஞ்சாப் அரசுக்கு இந்திய தடகள வீரர் தஜிந்தர் டூர் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து கூறிய அவர், “ஆசிய விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளுக்காக 8 லட்சம் ரூபாய் வழங்கிய பஞ்சாப் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பஞ்சாப் அரசு வழங்குவது இதுவே முதல்முறை.” என்று கூறியுள்ளார்.