விபத்தில் சிக்கி இதயத்துடிப்பு நின்ற இளைஞருக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய செவிலியர்…!

விபத்தில் சிக்கி இதயத்துடிப்பு நின்ற இளைஞருக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய செவிலியர் வனஜாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த கோட்டூர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தான் வனஜா. இவர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் மதுக்கூர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு குடும்பத்தினருடன் காரில் வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது, இவர்கள் கார் முன்பு சென்று கொண்டிருந்தஇருசக்கர வாகனத்தின் குறுக்கே ஆடு வந்ததால் விபத்த ஏற்பட்டுள்ளது.

இதனால் வாகனத்தில் இருந்த இளைஞர் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனை பார்த்ததும் செவிலியர் வனஜா உடனடியாக தனது காரை நிறுத்தி இளைஞரை பரிசோதனை செய்துள்ளார். அப்பொழுது அவருக்கு நாடி துடிப்பு நின்று ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். சற்றும் யோசிக்காமல் சிபிஆர் என்று சொல்லப்படக்கூடிய இதயத்துடிப்பை மீண்டும் கொண்டுவரும் சிகிச்சையை வனஜா இளைஞருக்கு கொடுத்துள்ளார்.

அதில் அந்த இளைஞரின் இதயத்துடிப்பு மீண்டும் பழைய நிலைக்கு வந்துள்ளது. அதன் பின்பு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்து அவரது உடல்நிலை சரியான பின் அவ்விடத்தில் இருந்து வனஜா கிளம்பியுள்ளார். விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் இருந்த இளைஞரின் உயிரை காப்பாற்றிய செவிலியர் வனஜாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

author avatar
Rebekal