இன்று வானில் நிகழருக்கும் அற்புதம்..,இதை மிஸ் பண்ணா 397 ஆண்டுகளுக்கு பிறகுதான்.!

வியாழன் மற்றும் சனி கோள்கள் 397 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஒரே கோளாக காட்சியளிக்க இருக்கிறது. இதனை வெறும் கண்களால் அனைவரும் பார்க்கலாம்.

வானில் அபூர்வ நிகழ்வாக வியாழன் மற்றும் சனி கோள்கள் 397 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஒரே கோளாக காட்சியளிக்க இருக்கிறது. இந்த இரண்டு கோள்களும் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக வானில் மேற்கு திசையில் காட்சியளித்து வந்த நிலையில், தற்போது நெருங்கி கொண்டே வருகின்றனர். பொதுவாக வியாழன் கோள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், சனி கோள் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் மாறுபட்ட வேகத்தில் சூரியனை சுற்றி வருகின்றன.

இந்த இரண்டு கோள்களும் ஒரே புள்ளியாக தோன்றினாலும், அவற்றுக்கு இடைப்பட்ட தூரம் 73 கோடி கிலோமீட்டராக இருக்கும் என்று கூறப்படுகிறது. சூரியனுக்கும், பூமிக்கும் இடைப்பட்ட தூரம் 14 கோடியே 72 லட்சம் கிமீ. இதேபோல சூரியனுக்கும், பூமிக்கும் உள்ள தூரத்தை போல 5 மடங்கு தூரத்தில் வியாழன் கிரகமும், 7 மடங்கு தூரத்தில் சனி கிரகமும் இருக்கின்றன. வியாழன் சூரியனை ஒரு தடவை சுற்றி வருவதற்கு 11.9 ஆண்டுகள் ஆகின்றன. சனி கோள் சூரியனை சுற்றுவதற்கு 29.5 ஆண்டுகள் ஆகின்றன என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று மாலை 5.45 மணிக்கு மேல் மேற்கு வானத்தில் அவற்றிற்கு இடைப்பட்ட கோணத்தில் 1 டிகிரியில் 10ல் ஒரு பங்காக குறைந்து இரண்டு கோள்களும் நம்முடைய கண்களுக்கு நேர்கோட்டில் வருவதால், அவைகள் ஒரே கோளாக காட்சியளிக்க இருக்கின்றது. 30 நிமிடத்தில் இருந்து 2 மணிநேரம் வரை நன்றாகத் தெரியும். அதன் பிறகு மறைந்துவிடும். இந்த காட்சி வானத்தில் தென்மேற்கே அரை கோளத்துக்கு கீழே அடிபகுதியில் தென்படும். இதனை வெறும் கண்களால் அனைவரும் பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சனி மற்றும் வியாழன் கோள்கள் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அருகருகே நெருங்கி வரும் என்றாலும், இதுபோன்று மிக நெருக்கத்தில் வந்தது கடந்த 1623-ம் ஆண்டு அதாவது, 397 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்து உள்ளது. இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு மே 28-ம் தேதி அவை அருகருகே வந்தன. ஆனால், அப்போது பகலில் சூரியனின் அருகில் இருந்து காட்சியளித்ததால், நம்மால் அவற்றை பார்க்க முடியவில்லை. தற்போது, இந்த ஆண்டு இன்று இந்த அதிசயம், அற்புதத்தை நாம் காண இருக்கிறோம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பூமியில் இருந்து வியாழன் அருகில் இருப்பதால் அது பிரகாசமாகவும், சனி தூரத்தில் இருப்பதால் சற்று மங்கலாகவும் இருக்கும் என அறிவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனிடையே, 397 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வானில் ஒன்றாக காட்சியளிக்கும் வியாழன் மற்றும் சனி கோள்களை சிறப்பிக்கும் விதமாக இரட்டை கோள்கள் காட்சி டூடுலை, வெளியிட்டது கூகுள் நிறுவனம்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்