கோழிக்கு மலச்சிக்கல் சார் மருத்துவமனைக்கு போகனும்…. ஊரடங்கின் போது பிடிபட்ட நபரின் காரணம்!

கர்நாடகாவில் ஊரடங்கின் போது பிடிபட்ட நபர் போலீசாரிடம் கோழிக்கு மலச்சிக்கல் என்று கூறியுள்ளார்.

கர்நாடகாவில் தற்போது ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுப்பாடுகளை மீறி வீட்டை விட்டு வெளியே வந்த நபர் போலீசாரால் பிடிக்கப்பட்ட போது கோழிக்கு மலச்சிக்கல் இருப்பதாக கூறியுள்ளார்.

தற்போது இந்தியா முழுவதும் கொரோனா 2 வது காட்டுத்தீ போல் பரவி இருப்பதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா தொற்று பரவல் சங்கிலியை உடைக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

இதன் விளைவாக கர்நாடகாவில் அத்தியாவசிய வேலைகளுக்காக மட்டுமே மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள், மேலும் தெருக்களில் காணப்படுபவர்கள் ஏன் வீட்டை விட்டு வெளியேறினார்கள் என்று ஒரு குறிப்பிட்ட காரணத்தை வழங்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சமீபத்தில், கர்நாடகாவின் கடக்கில் ஒரு நபர் ஊரடங்கு விதிகளை மீறியதற்காக போலீசாரால் பிடிக்கப்பட்டார், அதற்கு அவர் அளித்த காரணத்தால் போலீசார் திகைத்து நின்றனர். மேலும் ஊரடங்கு மத்தியில் எங்கு செல்கிறீர்கள் என்று போலீஸ் அவரை விசாரித்தபோது, அந்த நபர் தனது கோழிக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருப்பதால் ஒரு கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார்.

இக்காரணத்தைக் கேட்ட போலீஸ் அதிகாரிகள் சிரித்துவிட்டு அந்த நபரை வீட்டிற்கு திருப்பி அனுப்பி, மலச்சிக்கல் பிரச்சினைக்கு வீட்டிலேயே சிகிச்சை செய்யுமாறு அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு பின்னர், ட்விட்டர் பயனர் அமித் உபாத்யே என்பவரால் ட்விட்டரில் பதிவிடப்பட்டு தற்போது வைரலாகி உள்ளது.