#Breaking : 3-ஆவது நபருக்கு கொரோனா வைரஸ் ! கேரள அமைச்சர் அறிவிப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சீனாவில்  “ கொரோனா வைரஸ்” எனப்படும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.இந்த காய்ச்சல் முதலில் அந்நாட்டில் உள்ள உகான்  நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.உகானை மையமாக கொண்டு பரவி வரும் கொரோனா,அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் போன்ற நகரங்களிலும் பரவி உள்ளது.இந்த வைரஸ் மற்ற நாடுகளில் பரவிவிடாமல் இருக்க அனைத்து நாடுகளிலும் உள்ள சர்வேதேச விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளிடம் இந்த கொரோனா வைரஸ் காய்ச்சல் தாக்கி உள்ளதாக என சோதனை செய்த பின்னரே தங்கள் நாடுகளில் அனுமதிக்கின்றனர்.ஆனாலும் கொரோனா வைரஸ் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.இதுவரை சீனாவில் கொரோனா பாதிப்பால் 361 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல இந்த வைரசால் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதன் விளைவாக இந்தியாவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள், இந்திய விமான நிலையங்களில் கடுமையான மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் 3வது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மத்திய அரசும் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா கூறுகையில், கேரள மாநிலம் காசர்கோட்டில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரது உடல்நிலை சீராக உள்ளது. பாதிக்கப்பட்ட நபர் சீனாவில் இருந்து இந்தியா திரும்பியவர் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கேரளாவில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.இந்தியாவில் தற்போது வரை 3 நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு  இருப்பது உறுதியாகியுள்ளது.