Thirumavalavan

அரசியலமைப்பு சட்டத்தை மீறும் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் – விசிக தலைவர் திருமாவளவன்

By

ராஜ்பவன் ஆளுநர் மாளிகையா? ஆர்எஸ்எஸ் அலுவலகமா? என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி.

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து, அமைச்சர் இலாகாக்கள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றுவது தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் பரிந்துரை கடிதத்தை, ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு திமுகவினர் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், அரசியலமைப்பு சட்டத்தை மீறும் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், அமைச்சர் செந்தில் பாலாஜி நிர்வகித்து வந்த துறைகளை இரு வேறு அமைச்சர்களிடம் ஒப்படைப்பதற்காக ஆளுநருக்குப் பரிந்துரைத்துள்ளார் முதல்வர் முக ஸ்டாலின். அதனை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.

இது அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் அடாவடிப் போக்காகும். அமைச்சர்கள் யார் யார் ? அவர்களுக்கு என்னென்ன துறைகள்? என்பனவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரம் முதல்வருக்கே உண்டு. இதில், ஆளுநர் தலையிடுவதும் விமர்சிப்பதும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். ராஜ்பவன் ஆளுநர் மாளிகையா? ஆர்எஸ்எஸ் அலுவலகமா? என்கிற அய்யம் எழுகிறது என்று தெரிவித்துள்ளார்.