#FarmLawsRepealBill:ஒத்திவைக்கப்பட்ட அவைகள்;2 மணிக்கு வேளாண் சட்ட ரத்து மசோதா மாநில.அவையில் தாக்கல்- மத்.அமைச்சர் ஜோஷி!

டெல்லி:3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா, இன்று மதியம் 2 மணிக்கு மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது.மேலும்,இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடரானது டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே,பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகளின் மக்களவை எம்பிக்கள் சபாநாயகர் வெங்கையா நாயுடு அவர்களின் இருக்கையை முற்றுகையிட்டும்,முழக்கத்தையும் எழுப்பி வந்தனர்.

இதன்காரணமாக,நாடாளுமன்ற மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில்,12 மணிக்கு மீண்டும் தொடங்கிய மக்களவையில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வழிவகுக்கும் மசோதாவுக்கு மக்களவை எம்பிக்கள் ஒப்புதல் அளித்தனர்.இதனையடுத்து, 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என்று பிரதமர் மோடி கடந்த 19 ஆம் தேதி அறிவித்த நிலையில்,நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில்,3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா, இன்று மதியம் 2 மணிக்கு மாநிலங்களவையில் (ராஜ்யசபாவில்) தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் கூறுகையில்:

“வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை மக்களவையில் நிறைவேற்றி, அதைத் தொடர்ந்து மாநிலங்களவைக்கு கொண்டு செல்ல விரும்புகிறோம். ராஜ்யசபாவில் மசோதா கொண்டு வரப்படும் போது எதிர்க்கட்சிகள் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஏனெனில்,வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் இன்று வலியுறுத்தி வருகின்றன. ஆனால், நாங்கள் சட்டத்தை ரத்து செய்யச் சென்றபோது எதிர்க்கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தியதால், அவர்களின் நோக்கம் என்ன?”,என்று எதிர்க்கட்சிகளிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

3 வேளாண் சட்டம் ரத்து தொடர்பாக விவாதம் வேண்டும் என்று  இரு அவைகளின் எம்பிக்களும் முழக்கம் எழுப்பிய நிலையில், மாநிலங்களவையும்,மக்களவையும் மதியம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.