ஊரடங்கை நீடித்துக் கொண்டே செல்ல இயலாது…! விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்…! – தமிழக முதல்வர்

ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போகமுடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அதுவும் மக்களாகிய உங்கள் கையில் தான் இருக்கிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், ஜூன் 7ம் தேதி வரை மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழக முதல்வர் பேசுகையில், தமிழகத்தில், ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு கொரோனா பரவும் சங்கிலியை உடைத்தாலே, இந்த பெருந்தொற்று பாதிப்பில் இருந்து மீள முடியும். கொரோனா ஊரடங்கை அமல்படுத்திய பின் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும், ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போகமுடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அதுவும் மக்களாகிய உங்கள் கையில் தான் இருக்கிறது. கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றினால் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆக்சிஜன், படுக்கைகள் தட்டுப்பாடு தற்போது இல்லை. ஒரே நாளில் 3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனா வார்டுக்குள் பலரும் செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கினர். ஆனால், எனது உயிரை பணயம் வைத்து உள்ளே செல்ல காரணம்  என்னவென்றால், நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்து விடலாம் என நம்பிக்கை கொடுப்பதற்காகவே சென்றேன்.

தமிழக மக்களை காக்கவே என்னை நான் ஒப்படைத்துள்ளேன். தொற்றுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஒரு சிலர் கட்டுப்பாட்டை மீறினாலும், ஊரடங்கிற்கு முழுமையான பலன் கிடைக்காமல் போய்விடும். எனவே அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.