மர்மமாக புதைக்கப்பட்ட தொழிலாளியின் உடல்..! தோண்டியெடுத்த காவல் துறை..!

பெங்களூரில் மர்மமான முறையில் புதைக்கப்பட்ட தொழிலாளியின் உடலைக் காவல் துறையினர் தோண்டி எடுக்கவுள்ளனர்.

பெங்களூருவில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் வங்காளதேசத்திலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் இறந்தது குறித்தத் தகவலை அவரது உறவினருக்கோ, காவல்துறைக்கோ தெரியப்படுத்தாமல் அவரது முதலாளி மற்றும் தொழிலாளர்கள் குழு உடலை புதைத்துள்ளனர். தற்பொழுது அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக காவல் துறையினர் தோண்டி எடுக்கவுள்ளனர். மேலும் இது கொலையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.

வங்கதேசத்தைச் சேர்ந்த எம்.டி.ரசூல் ஹவ்லதார் என்பவர் மேற்கு வங்க மாநிலம் பாரகிராம் கிராமத்தைச் சேர்ந்த முகமது ரம்ஜான் என்பவரிடம் வேலை பார்த்து வந்தார். ரம்ஜான், ஹவ்லதாரிடம் ஒரு சைக்கிளை கொடுத்து பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் தூக்கி எறியப்பட்ட பொருட்களை எடுக்கும் வேலையை கொடுத்துள்ளார். வேலையை முடித்து விட்டு தனது சம்பளத்தை கேட்ட போது அவர் ஹவ்லதாரை அவதூறாக பேசி சம்பளத்தை தர மறுத்து, ரம்ஜான் மற்றும் அவரது நண்பர் ரசல் ஆகியோர் அவரை அடித்துள்ளனர்.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகியதால் ஹவ்லதார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை குறித்து தகவல் அறிந்ததும் ரம்ஜான் தனது மற்ற ஊழியர்களை இந்த சம்பவத்தை யாரிடமாவது தெரிவித்தால் பணிநீக்கம் செய்து விடுவேன் என்று எச்சரித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ரம்ஜான், அவரது நண்பர் ரசல் மற்றும் சில ஊழியர்களின் உதவியுடன் ஒயிட்ஃபீல்டுக்கு அருகில் ஹவ்லாதாரை யாருக்கும் தெரியாமல் புதைத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ரம்ஜானின் மனைவிக்கு பணிப்பெண்ணாக வேலை செய்த ஹவ்லாதாரின் உறவினரான அச்சிமான் ஷேக், காவல் துறையில் புகாரளித்தார். அவரளித்த புகாரின் பேரில் பிரேத பரிசோதனைக்காக உடலை தோண்டி எடுக்க அனுமதி கோரி போலீசார் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகுதான் மரணத்துக்கான சரியான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ரம்ஜான் மற்றும் ரசல் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீசார் மேலும் கூறினர்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment