45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது: ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல்,டீசல் வரியா?..!

லக்னோவில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது.

உத்திரப்பிரதேச மாநிலம் ,லக்னோவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தற்போது தொடங்கியது.இந்த கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அதன்படி,தமிழகம் சார்பில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்,வணிக வரித்துறை செயலாளர் பங்கேற்றுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, 2019-ல் கடைசியாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேரடியாக நடைபெற்ற நிலையில், கிட்டத்தட்ட 20 மாதங்கள் கழித்து தற்போது அதிகாரிகள் நேரடியாக பங்கேற்றுள்ளனர்.

இக்கூட்டத்தில்,கேரளா ஹைகோர்ட் வியாழக்கிழமை, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மறைமுக வரியை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது மற்றும் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறை ஆகியவை பற்றி விவாதிக்க வாய்ப்புள்ளது.

மேலும், கொரோனா அத்தியாவசிய மருந்துகள் மீதான ஜிஎஸ்டி விகித குறைப்பு டிசம்பர் வரை நீட்டிப்பு குறித்தும்,சோமாடோ மற்றும் ஸ்விக்கி போன்ற உணவு விநியோக பயன்பாடுகளை உணவகங்களாகக் கருதி, அவை வழங்கிய பொருட்களுக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என்ற யோசனை கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.