ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எங்களுக்கான தேர்தல் அல்ல.! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து.!

இந்த இடைத்தேர்தல்  பிரதமர் மோடிக்கான தேர்தல் அல்ல.  எங்களுக்கான (பாஜக) தேர்தல் 2024 நாடாளுமன்ற தேர்தல் தான். – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேட்டி. 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் ஏற்கனவே இங்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்ற மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடுகிறார்.

அதே போல, அதிமுக சார்பில் கடந்த தேர்தலில் தமாகா போட்டியிட்டு தோல்வியுற்றதால், இந்த முறை  அக்கட்சி அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து ஒதுங்கிவிட்டது. அதனால், அதிமுகவே நேரடியாக களமிறங்க உள்ளது. அதிலும், இபிஎஸ் – ஓபிஎஸ் என இரு பிரிவும் தீவிரமாக செயல்பட்டு வருவதால் எந்த தரப்பு அதிமுக சார்பாக போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அதே போல, அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக இந்த தேர்தலில் அதிமுக தான் போட்டியிடும். அதற்கு ஆதரவு தருகிறோம் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர். இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அவர் கூறுகையில், இந்த இடைத்தேர்தலில் பாஜக பலம் பற்றி நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இல்லை. ஜனவரி 31ஆம் தேதி வரையில் எங்களுக்கு நேரம் இருக்கிறது. எங்களை பொறுத்த வரையில் இந்த தேர்தலில்  திமுகவை எதிர்த்து ஒரு பலமான போட்டியாளர் களமிறங்க வேண்டும். என குறிப்பிட்டார்.

மேலும், இது எங்களுக்கான (பாஜக) பல பரீட்சை அல்ல.  இந்த தொகுதியில் அதிமுக பெரிய கட்சி. இதற்கு முன்னர் இங்கு வென்றவர்கள் அமைச்சர்களாக இருந்துள்ளனர். இந்த தேர்தல்  பிரதமர் மோடிக்கான தேர்தல் அல்ல.  எங்களுக்கான தேர்தல் 2024 நாடாளுமன்ற தேர்தல் தான். அங்கு எங்கள் பலத்தை நிரூபிப்போம். கடந்த 10 ஆண்டுகால ஆட்சி பற்றி மக்கள் முடிவெடுப்பார்கள்.  என ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment