“ஃபீல்டர்களிடம் நான் வைக்கும் ஒரே கோரிக்கை இதுதான்!” – கேப்டன் தோனி பேச்சு

வீரர்கள் என்னை எரிச்சலூட்டும் கேப்டனாக பார்க்க வாய்ப்புள்ளது என நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற பின் தோனி பேச்சு.

ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபையர் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. இதில், சென்னை அணி, குஜராத்தை வீழ்த்தி 15 வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இதையடுத்து, குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின் பேசிய சென்னை கேப்டன் தோனி, ஐபிஎல் தொடர் மிகப் பெரியது, மற்ற தொடர்களை போல இந்த தொடரின் இறுதிப் போட்டி என்பது சாதாரண விஷயம் கிடையாது. இந்த வெற்றிகள் எல்லாம் எங்களின் 2 மாத கடின உழைப்பு தான் காரணம். இதற்கு அனைவரும் பங்களித்துள்ளனர் என்றார்.

தொடர்ந்து பேசிய தோனி, வீரர்கள் என்னை எரிச்சலூட்டும் கேப்டனாக பார்க்க வாய்ப்புள்ளது, ஏனென்றால் ஒவ்வொரு பந்துக்கும் ஃபீல்டிங்கை மாற்றிக்கொண்டே இருப்பேன். என் உணர்வுகளுக்கு தோன்றும் விதமாக நான் ஃபீல்டிங்கை அமைப்பேன். அது பல நேரங்களில் அணிக்கு பயனளித்தும் உள்ளது. இதனால், நான் ஃபீல்டர்களிடம் வைக்கும் ஒரே கோரிக்கை, உங்களின் கவனம் எப்போதும் என் மீது இருக்க வேண்டும், கேட்ச் விட்டால் கூட நான் பெரிதும் ரியாக்ட் செய்ய மாட்டேன், ஆனால், என் மீது இருந்து பார்வையை மட்டும் எடுத்து விடாதீர்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஓய்வு குறித்த கேள்விக்கு, இதைப்பற்றி முடிவெடுக்க 8, 9 மாதங்கள் உள்ளது. இடையில் சிறிய ஐபிஎல் ஏலம் உள்ளது. ஏன் இப்போதே அதைப்பற்றி யோசித்து, தலைவலி ஏற்படுத்திக்க வேண்டும்.  விளையாடுவதாக இருந்தாலும் சரி, அல்லது நிர்வாக பொறுப்பாக இருந்தாலும் சரி, எப்போதும் சென்னை அணியோடு இருப்பேன் என தெரிவித்திருந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்