ஆறாவது முறையாக ஆட்சி செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழக மக்களுக்கு நன்றி – முக ஸ்டாலின்

ஆறாவது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழக மக்களுக்கு நன்றி என திமுக முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல்வேறு கட்டங்களை தாண்டி நடைபெற்று வருகிறது. சில இடங்களில் வெற்றி பெட்ரா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, திமுக 156 இடங்களிலும், அதிமுக 78 இடங்களிலும், தமிழகத்தில் 234 தொகுதிகளில் திமுக 156 இடங்களிலும், அதிமுக 78 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

திமுக நேரடியாக 124 இடங்களிலும் கூட்டணியை சேர்த்து, 156 இடங்களிலும் முன்னிலை வகித்து வரும் நிலையில், தமிழகத்தின் முதல்வராக முக ஸ்டாலின் ஆகிறார். இதனால் திமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி  வருகின்றனர். முக ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மு.க. ஸ்டாலின் மக்களுக்கு நன்றி தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்மொழிக்கும், இனத்துக்கும், நாட்டுக்கும் காவல் அரணாக உருவாக்கப்பட்ட திமுகவுக்கு ஆறாவது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழக மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுகவிடம் தமிழகத்தை ஒப்படைத்தால் நாடும், நாட்டு மக்களும் நலமாக இருப்பார்கள் என்பதை உணர்ந்து மக்கள் தங்களது மகத்தான ஆதரவைக் திமுக கூட்டணிக்கு வழங்கியுள்ளார்கள். தமிழகத்தில் 5 முறை ஆட்சி செலுத்திய முத்தமிழறிஞர் கலைஞர் வாழ்ந்த காலத்திலேயே, திமுக ஆட்சியை மலர வைக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், காலம் முந்திக் கொண்டு விட்டது.

அந்தக் கனவை நிறைவேற்றியாக வேண்டும் என்ற துடிப்புடன் ஒவ்வொரு நாளும் செயல்பட்டோம். அந்த உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்தான் மக்கள் தந்துள்ள இந்த மாபெரும் வெற்றியாகும். எத்தனை சோதனைகள் – எத்தனை வேதனைகள் – எத்தனை பழிச்சொற்கள் – எத்தனை அவதூறுகள் – என திமுகவின் மீது வீசப்பட்ட அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மொத்தத் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி! என குறிப்பிட்டுள்ளார்.

திமுக கூட்டணி அடைந்த வெற்றியைத் தங்களது வெற்றியைப் போல மதித்தும் நினைத்தும் காலையில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து, வரும் அகில இந்தியத் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், சமயச் சான்றோர்கள், திரையுலக நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி என்றும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அமையப் போகும் திமுக ஆட்சியானது, எத்தகைய கனவுகள் கொண்டதாக தமிழகம் அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் சேர்ந்து நடத்தப் போகும் ஆட்சியாகும். கழகம் வென்றது! – அதைத் தமிழகம் இன்று சொன்னது! இனித் தமிழகம் வெல்லும்! – அதை நாளைய தமிழகம் சொல்லும்! என தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்